ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்ட பின்னர், அவர் வியாழக்கிழமை தனது முதல் செய்தியாளர் கூட்டத்தில், பேசினார். அப்போது, நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “அரசு அதற்கு உறுதியான காரணங்களைத் தேட முடியவில்லை. ஏனெனில், அது பேரழிவு தரும் தவறுகளை நியாயப்படுத்துவதில் பிடிவாதமாகவும் மெத்தனமாகவும் இருக்கிறது” என்று கூறினார்.
106 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு புதன்கிழமை இரவு திகார் சிறையிலிருந்து வெளியே வந்த மூத்த காங்கிரஸ் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். “இந்த நிதியாண்டில் 7 மாதங்களுக்குப் பிறகும், பொருளாதாரம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சுழற்சிதன்மை கொண்டது என்று பாஜக அரசு நம்புகிறது. அரசாங்கம் தவறாக இருக்கிறது. ஏனென்றால் அது துப்பில்லாமல் இருக்கிறது என்பதே தவறானது. அதனால், உறுதியான காரணங்களைத் தேட முடியவில்லை. ஏனெனில், அது பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி, வரி பயங்கரவாதம், பாதுகாப்புவாதம் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் முடிவெடுக்கும் மையப்படுத்தப்பட்ட அதிகாரம்,போன்ற பேரழிவுகரமான தவறுகளை நியாயப்படுத்துவதுதில் பிடிவாதமாகவும், மெத்தனமாகவும் இருக்கிறது.” என்றார்.
கடந்த ஆறு காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களைக் குறிப்பிட்ட ப.சிதம்பரம், “அரசாங்கம் பொருளாதாரத்தின் திறமையற்ற மேலாளராக மாறிவிட்டது. பிரதமர் பொருளாதாரம் குறித்து வழக்கத்திற்கு மாறாக மௌனம் காத்து வருகிறார். அதை அவர் தனது அமைச்சர்களிடம் மோசடி மற்றும் கொந்தளிப்பில் ஈடுபட விட்டுவிட்டார்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அரசாங்கம் தற்போதைய மந்தநிலையை சுழற்சி என்று அழைக்கிறது. கடவுளே, நல்ல வேளை அவர்கள் அதை பருவகால மாற்றம் என்று அழைக்கவில்லை. அரசாங்கத்திற்கு கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு சிக்கல்களை தீர்க்கும் தீர்வுகள் அல்லது சீர்திருத்தங்கள் இல்லை.” என்று கூறினார்.
மேலும், “பொருளாதாரத்தை புதுப்பிக்க முடியும். ஆனால், இந்த அரசாங்கத்தால் அதைச் செய்ய இயலாது. பொருளாதாரத்தை மந்தநிலையிலிருந்து வெளியே கொண்டுவந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கித் தள்ளுவதற்கு காங்கிரசும் வேறு சில கட்சிகளும் சிறந்தவர்கள்என்று நான் நம்புகிறேன். ஆனால், நாம் நல்ல நேரத்துக்காக காத்திருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
“இந்த ஆண்டு முடிவில் வளர்ச்சி 5 சதவீதத்தை தொட்டால் நாம் அதிர்ஷ்டசாலிகளாக இருப்போம். டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியனின் எச்சரிக்கையை நினைவில் கொள்ளுங்கள். இந்த அரசின்கீழ் ஐயத்திற்கிடமான முறை காரணமாக 5 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது , உண்மையில் 5 சதவிகிதம் அல்ல. அது 1.5 சதவிகிதம் குறைவாக உள்ளது” என்று அவர் கூறினார்.
இரண்டு தனித்தனியான வழக்குகளில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், அமலாக்கத்துறை இயக்குநரகம் பதிவு செய்த பண மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கு முன்னர், சிபிஐ தாக்கல் செய்த ஊழல் வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
“அமைச்சராக எனது சாதனையும் எனது மனசாட்சியும் முற்றிலும் தூய்மையாக உள்ளன. என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், என்னுடன் உரையாடிய வணிகர்கள், என்னைக் கவனித்த பத்திரிகையாளர்கள் அதை நன்கு அறிவார்கள். எனது குடும்பம் கடவுளை நம்புகிறது. நீதிமன்றங்கள் இறுதியில் நீதியை வழங்கும் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.” என்று அவர் கூறினார்.
இருப்பினும், ப.சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். “இது சுயமாக சான்றளித்துக்கொள்வதாகும்” என்று அவர் கூறினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிதம்பரத்திற்கு ரூ .2 லட்சம் ஜாமீன் பத்திரத்தையும், அதற்கு சமமான இரண்டு ஜாமீன்களையும் வழங்குமாறு உத்தரவிட்டது. அப்போது, அவர், “எந்த பத்திரிகை நேர்காணல்களையும் அளிக்க மாட்டேன். அல்லது எந்தவொரு பொது கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். இந்த வழக்கில் அவரோ அல்லது பிற குற்றம் சாட்டப்பட்டவர்களோ சாட்சியங்களை சிதைக்கவோ அல்லது சாட்சிகளை அச்சுறுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ முயற்சிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
ப.சிதம்பரம் புதன்கிழமை இரவு 8 மணிக்கு, திகார் சிறையிலிருந்து வெளியே வந்தபோது அவரை வரவேற்க பல காங்கிரஸ் இளைஞர்கள் காத்திருந்தனர். அப்போது ப.சிதம்பரம், “இந்த வழக்கு குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. உச்ச நீதிமன்ற கருத்துக்கு நான் கீழ்படிகிறேன். வழக்கு குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். ஆனால், உண்மை என்னவென்றால், விசாரணைக்கு முன்பும், 106 நாட்களுக்கு சிறைவாசத்திற்குப் பிறகும், நாங்கள் இப்போது உங்களிடம் பேசும்போதும் ஒரு குற்றச்சாட்டு கூட என் மீது சுமத்தப்படவில்லை. என் மீது ஒரு குற்றச்சாட்டுகூட முன்வைக்கப்படவில்லை. நான் அதைப் பற்றி நாளை பேசுவேன்.” என்று கூறினார்.
ப.சிதம்பரத்தின் விடுதலைக்காக மாலை 5.30 மணி முதல் சிறைக்கு வெளியே காத்திருந்த அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு வழக்கு அல்ல. பழிவாங்கும் அரசியலைத் தவிர வேறொன்றுமில்லை… 106 நாட்கள் என்பது மிகவும் நீண்ட காலம். 106 நாட்கள் தேவையற்ற சிறைவாசம்; விசாரணைக்கு முந்தைய ரிமாண்ட் தேவையற்றது. ஆனால், உச்சநீதிமன்றம் நிவாரணம் அளித்ததிலும் அவர் இன்று இரவு வீடு திரும்புவதிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினார்.