P Chidambaram Is Now An Accused In Aircel-Maxis Case: ஏர்செல்-மேக்சிஸ் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் 16 பேர் பெயர்கள் சேர்க்கப்பட்டன.
ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்! முந்தையை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரு அரசுகளிலும் நிதி மற்றும் உள்துறை இலாகாக்களை கையாண்டார். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது விசாரணை நடைபெற்று வந்தது.
ப.சிதம்பரம் பெயர் குற்றப்பத்திரிகையில்!
ப.சிதம்பரம் பெயரையும் கூடுதலாக குற்றப்பத்திரிகையில் சேர்த்து இன்று நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், மற்றும் 16 பேர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மேற்படி 16 பேரும் ஓய்வுபெற்ற அல்லது இந்நாள் அதிகாரிகள் ஆவர்!
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய ஆகஸ்ட் 7 வரை தடை விதித்து கடந்த வாரம் டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம், ஐ.என்.எக்ஸ். மீடியா பண பரிவர்த்தனை ஆகியவற்றுக்கு வெளிநாட்டு பண முதலீட்டு வாரியம் அனுமதி கொடுத்தது தொடர்பான வழக்கு இது!
ப.சிதம்பரம் இது குறித்து கருத்து கூறுகையில், ‘குற்றப்பத்திரிகையில் எனது பெயரை சேர்க்க சிபிஐ-க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் இந்த வழக்கை சந்திப்போம்’என்றார் அவர்.
மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கபில்சிபல் கூறுகையில், ‘இந்த அரசிடமும், சிபிஐ-யிடமும் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? சிபிஐ போட்ட இதர குற்றப்பத்திரிகைகளுக்கு நேர்ந்த கதிதான் இதற்கும் ஏற்படும். 2ஜி வழக்கிற்கு என்ன நடந்தது என தெரியும். அதுதான் இதிலும் நடக்கும்’ என்றார் கபில்சிபல்!
P Chidambaram Is Now An Accused In Aircel-Maxis Case: ப.சிதம்பரம் பெயரை நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்தினம் குற்றப்பத்திரிகையில் இணைத்து அறிவிப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.