Biswa Kalyan Purkayastha, Silchar
Padma Shri awardee Dr Ravi Kannan’s contributions : மூத்த புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரவி கண்ணன் அவர்களுக்கு இந்த முறை பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர் கண்ணன் மற்றும் அவருடைய துணைவியார் சீதா (சமூக செயற்பாட்டாளர்) இருவரும் தெற்கு அசாமில் இருக்கும் பாரக் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு 2007ம் ஆண்டில் குடியேறினர். சென்னையில் இருந்த சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டு அசாமில் குடியேற காரணம் என்ன என்பதை இந்த கட்டுரையில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம். இந்தியாவில் மிகவும் பின் தங்கிய இடங்களில் ஒன்றாக இருப்பது பாரக் பள்ளத்தாக்கு ஆகும். இங்கு 40 லட்சம் மக்களுக்கு ஒரே ஒரு அரசு மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு இவர்களுக்கு மருத்துவ உதவி தேவை என்று அவர்கல் இங்கே வந்தனர். இந்தியாவில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் வடகிழக்கு இந்தியாவில் அளவுக்கு அதிகமாக கேன்சர் புற்றுநோயால் மக்கள் பாதிப்படைகின்றனர். இதனை உணர்ந்த இந்த தம்பதியினர் அங்கு குடியேறி ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றியுள்ளனர்.
அசாமில் அந்த காலத்தில் குண்டு வெடிப்புகள், வெள்ளங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்த செய்திகள் மட்டுமே எப்போதும் தலைப்பு செய்தியாக இடம்பெறும். இங்கு இயங்கி வரும் கச்சார் புற்றுநோய் மருத்துவமனை நிதி பற்றாக்குறை, போதுமான கட்டுமான வசதிகளற்ற நிலை, புற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள் என எதுவுமின்றி பெரும் சவால்களை சந்தித்து வந்தது. மற்றொரு பக்கம் பார்த்தால் கேன்சர் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவு மிகவும் அதிகமாக இருந்த காரணத்தால் பொதுமக்கள் பலரும் சிகிச்சை மேற்கொள்ளவே முன்வரவில்லை. ஆனால் இன்றோ இந்த மருத்துவமனை சுமார் 20 ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு வருடத்திற்கு சிகிச்சை அளித்து வருகிறது. நோயாளிகளுடன் வரும் உறவினர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருகிறது இந்த மருத்துவமனை. மேலும் நோயாளிகள், மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் உணவினையும் வழங்கி பாதுகாத்து வருகிறது.
கடவுளாக கொண்டாடும் பொதுமக்கள்
வெள்ளிக்கிழமை மாலை மருத்துவர் ரவி கண்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மகிழ்வான செய்தியை ஒட்டுமொத்த பாரக் பள்ளத்தாக்கும் கொண்டாடி வருகிறது. இது குறித்து கேன்சர் நோயில் இருந்து மீண்டு வந்த பேராசிரியர் ஜோய்தீப் பிஸ்வாஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கடவுளை இதற்கு முன்பு நேரில் பார்த்தது இல்லை. ஆனால் அந்த கடவுள் சச்சார் புற்றுநோய் மருத்துவமனையில் வாழ்கிறது என்று நெகிழ்ந்து எழுதியிருந்தார்.
இங்கு வருவதற்கு முன்பு டாக்டர் கண்ணன் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி யுனைட்டெட் ஸ்டேட்ஸ் இந்தியா எஜூக்கெசனல் ப்ரோஜெக்டில் பணியாற்றி வந்தார். கண்ணன் பலமுறை அசாமிற்கு சிறப்பு மருத்துவராக சென்று பார்வைவிட்டு வந்துள்ளார். நிரந்தரமாக அசாமிற்கு செல்வது குறித்து தன்னுடைய மனைவியிடம் தன்னுடைய அபிப்ராயத்தை தெரிவித்த போது, அசாமில் முறையான கல்வி வசதிகள் ஏதுமற்ற நிலை குறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார் சீதா. அவர்களுக்கு அப்போது 5-ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை இருந்தது குறிப்பிடத்தக்கது. சீதா அசாமிற்கு சென்று சில நாட்கள் தங்கி அங்குள்ள மக்களை கவனித்திருக்கிறார். அம்மக்களுக்கு அதிகப்படியான மருத்துவ உதவிகள் தேவையிருப்பதை உணர்ந்த பிறகு தன்னுடைய கணவர் அசாமிற்கு செல்வதை ஏற்றுக் கொண்டார்.
”கேன்சரில் பாதிக்கப்பட்டிருக்கும் எவரையும் குணப்படுத்திவிட முடியும். நீரிழிவு நோய் போன்று இது கிடையாது. கேன்சர் நோயால் ஒருவர் இறக்கிறார் என்பதை நான் காண விரும்பவில்லை. இந்த பகுதியில் மக்களின் வாழ்க்கைமுறையால் அளவுக்கு அதிகமாக கேன்சர் தாக்குதலுக்கு ஆளாகின்றனார். இந்த தண்ணீரிலோ காற்றிலோ ஏதும் இல்லை. ஆனால் வடகிழக்கு இந்திய மக்கள் அதிக அளவில் புகையிலை, வெற்றிலை மற்றும் மது பழக்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான வாழ்வியல் முறை என இரண்டையும் இவர்கள் பின்பற்றவில்லை. கேன்சரின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதைக் கூட உணர முடியாத அளவில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இந்த நோய் இருக்கிறது என்று கூறிவிட்டால் போதும் அவர்கள் உதவியற்ற நிலையை அடைந்துவிடுகிறார்கள்.
அவர்கள் இதை யாரிடமும் தெரிவிப்பதில்லை. இந்த எண்ணத்தை தான் நாம் உடைக்க வேண்டும். இதற்காகத்தான் நாங்கள் 15 வருடங்கள் வரை உழைத்து வருகின்றோம். அனைத்து வசதிகளுடன் கூடிய கேன்சர் மருத்துவமனையாக நாங்கள் இதனை மாற்ற விரும்புகின்றோம். கேன்சரை குணப்படுத்த மட்டுமில்லாமல் அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் நாங்கள் மக்களுக்கு எடுத்துக் கூறுகின்றோம். அரசும் இந்த திட்டத்தில் எங்களுக்கு உதவ முன் வந்துள்ளது. ஆனால் முழுமையாக அல்ல. இது ஒரு சொசைட்டியாகவே செயல்படுகிறது. ஆனால் நாங்கள் எங்களின் இலக்கு நோக்கி உழைத்துக் கொண்டே தான் இருப்போம். முடியாது என்பதற்கு எங்களின் அகராதியிலேயே இடம் இல்லை” என கூறுகிறார் மருத்துவர் ரவிக்கண்ணன்.
இந்த விருதானது இங்கு வந்து, இந்த மருத்துவமனையை நிஜமாக்கிய ஆயிரக்கணக்கானவர்களுக்கு சமர்பிக்கின்றோம். இந்த அங்கீகாரம் எங்களை மென்மேலும் உயரவைக்கும் மேலும் அனைத்து கேன்சர் நோயாளிகளும் முறையாக மருத்துவம் பெற இது நிச்சயம் உதவும். நாங்கள் இதனை ஆரம்பிக்கும் போது எங்களின் நிறுவனத்தில் போதுமான அடிப்படை கட்டிட வசதிகள் இல்லாமல் இருந்தது. போதுமான மருந்துகள் கிடைக்கவில்லை. ஆனால் எங்களின் முக்கிய பிரச்சனை அது இல்லை. மாறாக மக்களை கேன்சருக்கான முறையான சிகிச்சையை பெற முன்வரவில்லை. அவர்களிடம் அனைத்தையும் விளக்கி மருத்துவமனைக்கு வரவழைத்தோம். ஆனால் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் அவர்களையும் நாங்கள் இழக்க துவங்கினோம். நோயாளிகளுடன் வந்தவர்கள் அரிசி அவலை பச்சைமிளகாயுடன் உண்டுவிட்டு வெறுந்தரையில் படுத்து தூங்கினார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை தரும் அளவுக்கு எங்களுக்கு நிதி ஆதாரம் கிட்டவில்லை. அதனால் ஒரு முறை வந்து திரும்பிய நோயாளிகள் மீண்டும் மருத்துவமனைக்கு வரவில்லை.
கேன்சரை ஒரே ஒரு முறை மட்டும் மருத்துவரை பார்த்துவிட்டு சரி செய்துவிட இயலாது. தொடர் சிகிச்சைக்கு அவர்கள் வரவேண்டும். ஒரு நபர் ரூ. 5000 தந்து முதல் முறை சிகிச்சை பெற்றுக் கொண்டு திரும்பிவிட்டார். மீண்டும் அவர் எங்களுடைய மருத்துவமனைக்கு வரவேயில்லை. தன்னுடைய மகனை பணக்காரர் ஒருவருக்கு விற்று வந்த பணத்தை அவர் மருத்துவமனைக்கு எடுத்து வந்துள்ளார். இது எங்களின் மோசமான அனுபவமாக அமைந்தது. ஆனால் அந்த குழந்தையை ஒருவழியாக காப்பாற்றினோம். பிறகு எங்களின் மருத்துவமனை வருகைப்பதிவை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டோம். ஆரம்ப காலகட்டங்களில் எங்களுக்கு பல்வேறு உள்ளூர் குழுக்கள் உதவி செய்தனர். நாங்கள் எங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகளை அளிக்கின்றோம். அவர்களிடம் இருந்து ரூ. 500 மட்டுமே கட்டணமாக பெற்றுக் கொண்டோம். பின்பு வாழ்நாள் முழுவதும் அவர்கள் இலவசமாக மருத்துவம் பார்க்கலாம் என்று அறிவித்தோம். பிறகு எங்களின் மருத்துவமனைக்கு மறு பரிசோதனைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. மேலும் 70% நோயாளிகள் முற்றிலுமாக சரி செய்யப்பட்டனர். இந்தியாவில் மற்ற புற்றுநோய் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு நிகரான சிகிச்சைகளை நாங்கள் எங்களின் மருத்துவமனையில் வழங்கி வருகின்றோம். முறையற்ற சிகிச்சை என்பது கொடுமையானது என்பதை நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் நோயாளிகளிடம் உண்மையை மட்டுமே கூறினோம். இதற்காக நான் கடுமையான விமர்சிக்கப்பட்டேன். ஆனாலும் ஒரு நோயாளிக்கு கேன்சர் உள்ளது என்றும் அதனை குணப்படுத்தலாம் என்பதையும் அறிந்து கொள்ள அவருக்கு உரிமை உண்டு என்றே நான் நினைக்கின்றேன்.
அனைத்து பகுதியிலும் கேன்சர் நோய்க்கான மருத்துவ சேவைகள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்று டாக்டர் கண்ணன் விரும்புகிறார். மற்ற மருத்துவர்களுடன் இணைந்து சேட்டிலைட் கிளினிக்குகள் மூலமாக கரிம்கஞ்ச், ஹைலாகாந்தி, மற்றும் திமா ஹசௌ ஆகிய மாவட்டங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். கச்சார் மருத்துவமனையில் 2006ம் ஆண்டு முதல் ரேடியேசன் யூனிட் வந்தது. பிறகு 2008ம் ஆண்டு தகுதி பெற்ற செவிலியர்கள் இந்த மருத்துவமனையில் இணைந்தனர். கண்ணனுடைய மேற்பார்வையில் முதல் மைக்ரோவாஸ்குலர் அறுவை சிகிச்சை 2012ம் ஆண்டு நடைபெற்றது. வடகிழக்கு இந்தியாவில் நடைபெறும் முதல் அறுவை சிகிச்சை இதுவாகும்.
மருத்துவர் கண்ணனுடைய தந்தை இந்திய விமானப்படையில் பணியாற்றியவர். அவருடைய சேவைக்காக அவருக்கு விஷிஷ்த் சேவா விருது வழங்கியது இந்திய அரசு. பத்ம ஸ்ரீ என்பது அவர்களுடைய குடும்பத்திற்கு கிடைக்கும் இரண்டாவது விருதாகும். இது குறித்து ரவிக் கண்ணனின் தாயார் பேசும் போது, ஒரு நாள் தன்னுடைய மகன் இது போன்ற பெரிய விருதினை பெறுவார் என்று தெரியும் என்று கூறி அகம் மகிழ்ந்தார். “நானும் என்னுடைய கணவனும் ரவிக்கண்ணன் ஒரு மருத்துவராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அப்போது தான் அவனால் ஏழை எளிய மக்களுக்கு உதவ முடியும் என்று நாங்கள் நினைத்தோம். அவன் எப்போதும் பணிவான குழந்தையாகவே இருந்தான். தன்னுடைய பணியை மிகவும் அர்பணிப்புடன் செய்தான். இந்த விருதுக்கும் கூட அவனிடம் எந்த வித எக்ஸைட்மெண்ட் ஏதும் கிடையாது. ஆனால் இதனால் இன்னும் நிறைய மக்களுக்கு உதவலாம் என்று தான் அவன் நினைத்தான். நாங்கள் இந்த நாட்டில் மிகவும் அழகான பகுதியில் வாழும் எளிமையான, சைவம் உண்ணும் தென்னிந்தியர்கள்” என்று கூறுகிறார் அவருடைய அம்மா இந்துமதி கண்ணன்.
பல்வேறு வகையில் வேறுபட்டு திகழும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் இங்கே வரலாம் என்று முடிவு செய்த போது எங்களுக்கு இங்கு பேசும் மொழியும் கூட தெரியாது. ஆனால் இன்று எங்களை கவனிக்க இங்கு நிறைய மக்கள் உள்ளனர். மேலும் எங்களுடைய மகளுக்கு நல்ல தரமான கல்வி இங்கு கிடைத்திருக்கிறது. இந்த கேன்சர் ஆராய்ச்சி மருத்துவமனை மூலமாக மக்களுக்கு நாங்கள் சேவை செய்வதை மகிழ்ச்சியாக கருதுகின்றோம். இந்த பத்ம ஸ்ரீ என்பது தனி நபர் ஒருவருக்கு கிடைத்த வெற்றியல்ல. 10 வருடத்திற்கும் மேலாக அர்பணிப்புடன் பணியாற்றிய ஒரு குழுவுக்கு கிடைத்த வெற்றி இது என்கிறார் கண்ணனின் மனைவி சீதா.
கண்ணனுடைய குடும்பத்தினருக்கு வளர்ப்பு பிராணிகள் என்றால் கொள்ளை இஷ்டம். அவர்களுடைய சிறிய வீட்டில் நாய்கள் மற்றும் பறவைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அவர்களுடைய நாய்க்கு ஹிரோ என்று பெயரிட்டுள்ளனர். ஜப்பான் மொழியில் ஹிரோ என்றால் தைரியம் என்று அர்த்தம். பல்வேறு காலகட்டங்களில் அசாம் மாநில அரசு இவர்களுடைய சச்சார் மருத்துவமனைக்கு நிதி உதவி வழங்கியுள்ளது. மருந்துகள் தொடர்ச்சியாக வரவழைக்கப்படுகிறது. உள்கட்டுமானத்துறைக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பத்ம ஸ்ரீ விருதினால் அரசின் நிதி இந்த மருத்துவமனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.