இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விருதான பத்ம விபூஷன் விருந்து இசைஞானி இளையாராஜாவுக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் இரண்டாவது இடத்தில் பத்ம விபூஷண் விருது உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
தொல்லியல் ஆய்வாளர் ராமசந்திரன் நாகசுவாமிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த 98 வயதான யோகா ஆசிரியர் வி.நாகம்மாள், நாட்டுப்புறப் பாடகர் டாக்டர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், சென்னை கிண்டி பாம்பு பண்ணையை நிறுவிய ராமுலஸ் விட்டேகர், பொறியாளர் ராஜகோபாலன் வாசுதேவன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதற்கும் மொத்தம் மூன்று பத்மவிபூஷண் விருதுகளையும், ஒன்பது பத்மபூஷண் விருதுகளையும், 73 பத்மஸ்ரீ விருதுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து அவரிடம் கேட்ட போது, ’பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை என்றும் தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன்’ என்று கூறினார்.
பத்ம விபூஷண் விருது பெற்ற இளையராஜாவை திரையுலகினர் மட்டுமல்லாது பலரும் வாழ்த்தி வருகின்றனர். ரஜினி, கமல் இருவரும் போனில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளையராஜா மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.