வீடியோ: பள்ளி வாகனத்தை கல்வீசி தாக்கிய ‘பத்மாவத்’ எதிர்ப்பாளர்கள்: அச்சத்தில் நடுங்கும் குழந்தைகள்
சில அமைப்பினர் பள்ளி வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால், மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்திலிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரியானா மாநிலத்தில், பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில அமைப்பினர் பள்ளி வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்திலிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என, உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய் கிழமை உத்தரவிட்ட நிலையில், அப்படத்தை திரையிட முடியாது என ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மஹராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கர்னி சேனா அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இன்று இத்திரைப்படம் வெளியான நிலையில், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் படத்தை திரையிட மாட்டோம் என மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், அந்த மாநிலங்களில் பத்மாவத் திரைப்படம் இன்று வெளியாகவில்லை.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் ராஜ்புத் சமுதாயத்தை சேர்ந்த அமைப்பினர் பள்ளி வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்திலிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த பள்ளி வாகனம் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, அந்த அமைப்பினர் பேருந்துக்கு தீ வைத்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். பள்ளி வாகன தாக்குதலில் வாகனத்தின் கண்ணாடி உடைந்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, 13 பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.