காஷ்மீரில் அமைதியும் செழிப்பும் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததாகவும், பயங்கரவாதிகள் காஷ்மீரை மீண்டும் அழிக்க விரும்புவதாகவும் மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர்
நரேந்திர மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்தவகையில் இன்றைய தினம் ஏப்ரல் மாத நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது, அவர் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து உணர்ச்சிமிக்க கருத்துக்களை தெரிவித்தார். தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் கடுமையான தண்டனையை பெறுவார்கள் என பிரதமர் உறுதி தெரிவித்தார்.
நிகழ்வில் பிரதமர் மோடி பேசிய உரை: "கடந்த ஏப்.22ம் தேதியன்று பஹல்காமில் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத தாக்குதல், தேசத்தின் அனைத்துக் குடிமக்களையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தாரோடு, அனைத்து இந்தியர்களுமே மனங்களில் ஆழமான துயரத்தை அனுபவிக்கிறார்கள். இந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய படங்களைப் பார்க்கும் போது தேசத்தவர் அனைவரின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. பஹல்காமில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தத் தாக்குதல், பயங்கரவாதிகளின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
காஷ்மீரத்திலே அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையிலே, பள்ளிகள்-கல்லூரிகளில் ஓர் உயிர்ப்பு துளிர்த்த நேரத்திலே, கட்டமைப்புப் பணிகள் வரலாறுகாணாத வேகம் எடுத்த போதினிலே, ஜனநாயகம் வேரூன்றத் தொடங்கிய காலத்திலே, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரைகாணா அதிகரிப்பை காணும் வேளையிலே, மக்களின் வருவாய் பெருகிவந்த நேரத்திலே, இளைஞர்களுக்கு புதிய சந்தர்ப்பங்கள் உருவாகிக் கொண்டிருந்த காலத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
தேசத்தின் எதிரிகளுக்கு, ஜம்மு-காஷ்மீரின் எதிரிகளுக்கு, இந்த வளர்ச்சி முற்றிலும் பிடிக்கவில்லை. எனவே, தான் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் காரணகர்த்தர்கள் காஷ்மீரத்தை அழிக்கத் துடித்தார்கள், ஆகையால் தான் இத்தனை பெரிய சூழ்ச்சிவலையைப் பின்னினார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தில், தேசத்தின் ஒற்றுமை, 140 கோடி இந்திய மக்களின் ஒருமைப்பாடு ஆகியன தான் நம்முடைய மிகப்பெரிய பலமாக விளங்குகிறது.
இந்த ஒற்றுமை, பயங்கரவாதத்திற்கு எதிரான நம்முடைய தீர்மானமான போரின் ஆதாரம். தேசத்திற்கு முன்பாக எழுந்திருக்கும் இந்த சவாலை எதிர்கொள்ள, நமது உறுதிப்பாட்டை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எவ்வாறு தேசம் முழுவதும் ஒரே குரலெடுத்துப் பேசுகிறது என்பதை உலக நாடுகள் கவனித்துக் கொண்டிருக்கிறது.
நம்மிடம் காணப்படும் இந்த ஆக்ரோஷமும் கோபமும் உலகம் முழுவதிலும் பிரதிபதிலித்துள்ளது. இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தொடர்ந்து உலகெங்கிலுமிருந்து அனுதாபங்கள் குவிந்து வருகின்றன. உலகத் தலைவர்கள் என்னை தொடர்பு கொண்டு செயலுக்கு கண்டனங்களை பகிர்ந்ததுடன் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நம்முடைய போரிலே, 140 கோடி இந்திய மக்களுடன் உலகமே துணை நிற்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும், கண்டிப்பாக கிடைத்தே தீரும் என்று மீண்டும் ஒருமுறை நம்பிக்கை அளிக்கிறேன். இந்தத் தாக்குதலைச் செய்தவர்களுக்கும், இந்த வஞ்சகச் செயலைத் திட்டமிட்டுக் கொடுத்தவர்களுக்கும் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு மோடி பேசினார்.
முன்னதாக, ஏப்.24 அன்று பீகாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். வழக்கத்திற்கு மாறாக அவர் ஆங்கிலத்திற்கு மாறி, "இன்று, பீகார் மண்ணில் இருந்து, நான் முழு உலகிற்கும் சொல்கிறேன்: இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டு, தண்டிக்கும். பூமியின் எல்லை வரை அவர்களைத் துரத்திச் செல்வோம். தீவிரவாதத்தால் இந்தியாவின் உத்வேகம் ஒருபோதும் உடைக்கப்படாது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஒட்டுமொத்த தேசமும் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது என்றார்.
இதற்கிடையில், பிரதமர் மோடி தனது 'மான் கி பாத்' உரையில், ஏப்ரல் 25 அன்று காலமான இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கனின் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். அறிவியல், கல்வி மற்றும் இந்தியாவின் விண்வெளி திட்டம் ஆகியவற்றிற்கு புதிய உயரங்களை வழங்குவதில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது தலைமையின் கீழ் இஸ்ரோ ஒரு புதிய அடையாளத்தை அடைந்தது" என்று மோடி கூறினார்.