/indian-express-tamil/media/media_files/2025/04/30/ZwC1lZd9MbBOxuGzFndY.jpg)
Pakistan's information minister Attatullah Tarar
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கோரமான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாக பாகிஸ்தான் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டு பிராந்தியத்தில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அட்டாடுல்லா தாரார் திங்களன்று இரவு தனது X-பக்கத்தில் வெளியிட்ட பரபரப்பான அறிக்கையில், "பஹல்காம் சம்பவத்திற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக இந்தியா முன்வைக்கும் ஆதாரமற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது என்பதற்கான நம்பகமான உளவுத்தகவல்கள் இஸ்லாமாபாத்திடம் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பொதுமக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா தனது ராஜதந்திர நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளது. புது தில்லியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதரகங்களுக்கு இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்துள்ளதுடன், உலக நாடுகளின் தலைவர்களுடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளது.
மறுபுறம், பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்திய ஆயுதப் படைகளுக்கு "எப்போது, எப்படி, எந்த இலக்கை தாக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான முழு அதிகாரத்தையும்" வழங்கியுள்ளார். நமது ஆயுதப் படைகளின் "தொழில்முறை திறன்களில் முழு நம்பிக்கை" இருப்பதாக அழுத்தமாக கூறியுள்ள பிரதமர் மோடி, "பயங்கரவாதத்திற்கு கடுமையான பதிலடி கொடுப்பது நமது நாட்டின் உறுதியான நிலைப்பாடு" என்றும் சூளுரைத்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், பாகிஸ்தான் அமைச்சரின் இந்த குற்றச்சாட்டு பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்வதால், தெற்காசியாவில் அமைதி நீடிக்குமா என்ற கவலை அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
Read in English: Pakistan claims they have ‘credible evidence of Indian military strike in next 24-36 hours’
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.