காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரு பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீருக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. இந்தக் குழு சம்பா-கதுவா பகுதி வழியாக பாதுகாப்பு வேலியை வெட்டிக்கொண்டு நுழைந்ததாகவும், அதன் பின்னர் பல பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத சம்பவங்களைத் தொடர்ந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், உள்துறை அமைச்சகத்திடமிருந்து மூத்த பிஎஸ்எஃப் அதிகாரிக்கு கணிசமான ஆதரவு கிடைத்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் அனந்த்நாக் மேல் பகுதிகளை ராணுவம், ராஷ்ட்ரியரைபிள்ஸ் மற்றும் துணை ராணுவப்படைகள் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. உள்ளூர் பழங்குடி மக்கள் உதவி, தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி பயங்கரவாதிகள் உள்ள இடத்தை அங்குலம் அங்குலமாக நெருங்கி வேட்டையாட உள்ளனர்.
2 பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும் அனந்த்நாக் போலீசார் அலி பாய் மற்றும் ஹாஷிம் மூசா சுலைமான் என்று அடையாளம் கண்டுள்ளனர். பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3வது நபராக நம்பப்படும் உள்ளூர் லஷ்கர்-இ-தொய்பாவின் அடில் உசேன் தோக்கரின் வரைபடங்களை போலீசார் ஏற்கனவே வெளியிட்டுள்ளனர். அவர்கள் இருக்குமிடம் குறித்து தகவலத்தால் ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்.20 ஆம் தேதி சோன்மார்க்கில் நடந்த இசட்-மோர் சுரங்கப்பாதை தாக்குதலில் மூசா ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த 7 பேர் கொல்லப்பட்டனர். நேரில் கண்ட சாட்சிகள் வழங்கிய தகவல்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வழிகாட்டிகளால் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் குறித்து பாதுகாப்புப் படையினரிடம் உள்ள தகவல்கள் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து தாக்குதல் நடத்திய 3 பேரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
"உள்ளூர்வாசிகளுக்கு பயங்கரவாதிகளின் பல புகைப்படங்கள் காட்டப்பட்டன. அவர்கள் ஒரு புகைப்படத்திலிருந்து மூசாவை அடையாளம் கண்டனர். அங்கிருந்து அனைத்து தகவல்களின் அடிப்படையில் மற்ற தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது" என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.
மூசாவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படம், கொல்லப்பட்ட உள்ளூர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஜுனைத் அகமது பட்டின் தொலைபேசியிலிருந்து மீட்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இசட்-மோர் தாக்குதலை நிகழ்த்தும்போது சிசிடிவி கேமராவில் பதிவான அகமது, கடந்த டிசம்பரில் டாஸ்ஸிகாம் காடுகளில் கொல்லப்பட்டார். அவரது உடலிலிருந்து ஒரு தொலைபேசியை போலீசார் மீட்டனர். அதில் மூசா உட்பட பிற பயங்கரவாதிகளுடன் அவரது புகைப்படங்கள் இருந்தன. அலி பாய் அதே குழுவைச் சேர்ந்தவர் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் ஆட்சேர்ப்பு உள்ளூர்வாசியாக தோக்கரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அனந்த்நாக்கில் உள்ள பிஜ்பெஹாராவைச் சேர்ந்த தோக்கர், 2018-ம் ஆண்டு வாகா எல்லையைத் தாண்டி மாணவர் விசாவில் பாகிஸ்தானுக்குச் சென்றார். பின்னர் பாகிஸ்தானில் உள்ள எல்.இ.டி பயங்கரவாத பயிற்சி முகாமில் சேர்ந்தார். அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இந்தியா திரும்பினார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு முன்பு, தோக்கர் காஷ்மீரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். பயங்கரவாதிகள் பின்னர் பூஞ்ச்-ராஜோரி, பாரமுல்லா மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அக்.24 அன்று நடந்த பூட் பதரி தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் மற்றும் 2 போர்ட்டர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமதுவின் ஒரு பிரிவான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி உரிமை கோரியது.
மூசா மிக பயிற்சி பெற்றவராகவும், காட்டில் வாழ்வதில் திறமையானவராகவும் கருதப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 3 ஆண்டுகளாக ஜம்முவை அச்சுறுத்தி, துல்லியமான துப்பாக்கிச் சூடு மற்றும் திருட்டுத்தனமான நகர்வுகள் மூலம் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களைக் கொன்ற ஊடுருவல்காரர்களில் இவரும் ஒருவராக இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
2023 ஆகஸ்ட் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதில் இதே குழு ஈடுபட்டதா என்பது குறித்தும் புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மே மாதம் பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் இந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒரு விமானப்படை வீரர் கொல்லப்பட்டார். மேலும் 4 பேர் காயமடைந்தனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
துப்பாக்கிச் சூட்டின்போது, பயங்கரவாதிகள் தங்கள் கூட்டாளிகளை விரைந்து சென்று அங்கிருந்து வெளியேறுமாறு வற்புறுத்தியதாக தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 12 பேருக்கு தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன