லண்டனைச் சேர்ந்த காமன்வெல்த் தீர்ப்பாயத்தின் நடுவர் பதவியை ஏற்க, மத்திய அரசுக்கு வழங்கிய சம்மதத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி சிக்ரி திடீரென திரும்ப பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிபதி சிக்ரி :
உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவர் ஏ.கே.சிக்ரி. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இவரும் இடம் பெற்றுள்ளார். சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை அப்பதவியில் இருந்து மாற்றுவதற்காக சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலை தேர்வுக்குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், லண்டனில் உள்ள காமன்வெல்த் தீர்ப்பாயம் உள்ளது. இதில், காமன்வெல்த் அமைப்பில் உள்ள நாடுகளின் நீதிபதிகள் நடுவர்களாக செயல்படுவார்கள். அதில், இந்தியாவின் சார்பாக நீதிபதி ஏ.கே.சிக்ரியை நியமிக்க மத்திய அரசு விருப்பம் தெரிவித்தது. இதற்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி முதலில் சம்மதம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல்கள் மற்றும் சர்ச்சைகள் வெடித்தன. நீதிபதி சிக்ரி, வரும் மார்ச் 6-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். காமென்வெல்த் தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி சிக்ரியை மத்திய அரசு பரிந்துரைத்த நிலையில், தற்போது அவர் அந்த பதிவியை ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலோக் வர்மா நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட குழுவில் சிக்ரி இடம் பெற்றதற்கும், தீர்ப்பாயத்தின் தலைவராக மத்திய அரசு சிக்ரியை பரிந்துரைத்தற்கும் நிறைய சம்மந்தங்கள் இருப்பதாக ஊடகங்களில் விவாதங்கள் அரங்கேறின. இந்த விமர்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் நீதிபதி சிக்ரி இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்து சிக்ரி, தற்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிக்ரி மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் தனது ஓய்வுக்கு பிறகு தன் பெயரை காமன்வெல்த் தீர்ப்பாய பதவிக்கு பரிந்துரைக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த காமென்வெல்த் தீர்ப்பாயத் தலைவர் பதவி என்பது ஊதியம் இல்லாத பதவியாகும், ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை மட்டும் செல்ல வேண்டியது இருக்கும் என்ற காரணத்திற்காகவும் நீதிபதி சிக்ரி இந்த பதவியை நிராகரித்துள்ளதாகவும் ஒருதரப்பினர் கூறி வருகின்றனர்.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “ கடந்த ஆண்டு டிசம்பர் முதல்வாரத்தில்தான் நீதிபதி சிக்ரியிடம் மத்திய அரசு வாய்மொழியாகச் சம்மதம் கேட்டது.அதற்கு சிக்ரி சம்மதம் தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.