Navjeevan Gopal , Jagdeep Singh Deep
‘Pak-based gangster’ is key suspect in Mohali ‘terror’ attack: மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் புலனாய்வுத் தலைமையகம் மீதான தாக்குதலுக்கு, தற்போது பாகிஸ்தானில் தங்கியிருந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் தேடப்படும் குற்றவாளியான ஹர்விந்தர் சிங் என்ற ரிண்டா திட்டமிட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
செவ்வாயன்று, ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு (RPG) கட்டிடத்தின் மீது வீசப்பட்ட மறுநாள், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், "சிலர்" கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள். பஞ்சாபில் அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கத் துணிந்தவர்கள் யாரும் தப்ப மாட்டார்கள்," என்று கூறினார்.
யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படாத தாக்குதலில் விசாரணைக்காக அம்பாலாவைச் சேர்ந்த சந்தேக நபர் உட்பட 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அவர்களில் "சில சந்தேக நபர்கள்" தாக்குதலுக்கு தேவையான "உபகரணங்களை" வழங்கியதாக நம்பப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க பத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட லாஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டதாக மொஹாலி காவல்துறை கூறியது, ஆனால் அது குறித்த கூடுதல் விவரங்களை தெரிவிக்கவில்லை. "இது நிச்சயமாக ஒரு பயங்கரவாத தாக்குதல்" என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் சமீபத்தில் ஃபெரோஸ்பூர் மைதானத்தில் வெடிபொருட்கள் வீசப்பட்டதாக சந்தேகப்படும் நிகழ்விலும், 35 வயதான ரிண்டாவுக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. ரிண்டாவின் கூட்டாளிகள் என்று கூறப்படும், நான்கு பஞ்சாப் வாசிகளிடம் இருந்து கடந்த வியாழக்கிழமை இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. அவர்கள் தெலுங்கானாவுக்குச் சென்று கொண்டிருந்தப்போது வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி இரவு நவன்ஷாஹரில் உள்ள குற்றப் புலனாய்வு முகமை கட்டிடத்தில் நடந்த கையெறிக்குண்டுத் தாக்குதலிலும் ரிண்டாவுக்கு தொடர்பு சந்தேகிக்கப்படுகிறது. அந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சமீபத்தில் காவல்துறையினரால் கைது நடவடிக்கை, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டெடுப்பதற்கு எதிர்வினையாக தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது. காவல்துறை தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை பெரிய அளவில் முன்னிறுத்தி வருகிறது," என்று கூறினார்.
மொஹாலி தாக்குதல் அரசியல் அரங்கில் எதிரொலித்தது, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் இதை ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கு "விழித்தெழ வேண்டிய நேரம்" என்று விவரித்து பாதுகாப்பு மறுஆய்வு செய்ய கோரிக்கை விடுத்தனர்.
செவ்வாயன்று, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), புலனாய்வுப் பணியகம் (ஐபி) மற்றும் பிற நிறுவனங்களின் புலனாய்வாளர்கள் தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். “பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் அனைத்து இடங்களையும் NIA வழக்கமான முறையில் ஆய்வு செய்யும். NIA நாடு முழுவதும் அதிகார வரம்பைக் கொண்ட ஒரு மத்திய ஏஜென்சி என்பதால், இது NIA ஏஜென்சி விசாரணைக்கு ஏற்ற வழக்கா என்பதைத் தீர்மானிக்க தளங்களை கட்டாயம் ஆய்வு செய்யும்,” என்று ஒரு மத்திய அதிகாரி கூறினார்.
புலனாய்வுத் தலைமையகத்தில் உளவுப் பிரிவு, உள் பாதுகாப்பு, எதிர் நுண்ணறிவு, நிதிப் புலனாய்வுப் பிரிவு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு (OCCU) அலுவலகங்கள் உள்ளன, இது புதிதாக உருவாக்கப்பட்ட குண்டர் தடுப்புப் பணிப் படை (AGTF) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
“மாநிலத்தில் நடந்த தாக்குதலில் ஆர்பிஜி பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு பயிற்சி தேவை மற்றும் பயிற்சி இல்லாதவரால் இந்த தாக்குதலை நடத்தியிருக்க முடியாது,” என்று ஒரு போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. அந்த இடத்தில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள தேரா பஸ்ஸிக்கு அருகில் குற்றவாளிகள் பயன்படுத்திய வெள்ளை நிற கார் கடைசியாக காணப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலைத் தொடர்ந்து, சோஹானா காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது IPC பிரிவு 307 (கொலை முயற்சி), மற்றும் UAPA மற்றும் வெடிபொருள் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் போலீஸார் FIR பதிவு செய்தனர்.
பஞ்சாப் டிஜிபி வீரேஷ் குமார் பவ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் டிஎன்டி என தெரிகிறது. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளை விரைவில் வெளிப்படுத்துவோம்," என்று கூறினார்.
”திங்கள்கிழமை மாலை அலுவலகம் காலியாகயிருந்தபோது தாக்குதல் நடந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுமார் 80 மீ தூரத்தில் இருந்து கையெறிக்குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஒரு சவாலான வழக்கு, ஆனால் நாங்கள் விரைவில் கண்டுபிடிப்போம், ”என்று பவ்ரா கூறினார்.
எவ்வாறாயினும், துணிச்சலான இந்த தாக்குதல், புலனாய்வுப் பிரிவின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. “சண்டிகரில் மாநில டிஜிபி அலுவலகம் அமைந்துள்ள முக்கிய போலீஸ் கட்டிடத்தை விட இந்தக் கட்டிடம் முக்கியமானது. அதிக சேதம் ஏற்படவில்லை என்றாலும், தீவிரவாதிகள் உளவுப் பிரிவின் கட்டிடத்தை கூட குறிவைக்க முடியும் என்ற செய்தியை தெரிவிக்கும் முயற்சியே இந்த குண்டுவெடிப்பு ஆகும்,” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா, பாதுகாப்பு நிலைமையை மறுஆய்வு செய்யுமாறும், பஞ்சாபில் அமைதி மற்றும் பாதுகாப்பு விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறும் முதலமைச்சரை வலியுறுத்தினார். டெல்லியில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் சிங் ஷெர்கில், பஞ்சாப் அரசாங்கத்தால் விசாரணையை கையாள முடியவில்லை என்று கூறினார். மேலும், விசாரணையில் மத்திய அமைப்புகளை ஈடுபடுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள்: காங்கிரஸ் கட்சிக்கு பலன் அளிக்குமா சிந்தன் ஷிவர்? இதுவரையிலான வரலாறு என்ன?
முன்னாள் காங்கிரஸ் பஞ்சாப் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ட்வீட் செய்ததாவது: “மொஹாலியில் உளவுத்துறை அலுவலகம் மீதான தாக்குதல், மாநில உளவுத்துறையை மிகவும் மோசமான வெளிச்சத்தில் காட்டுவதாக உள்ளது… அரசாங்கம் விழித்தெழ வேண்டிய நேரம். நித்திய விழிப்புணர்வு காலத்தின் தேவை, சட்டம் மற்றும் ஒழுங்கே முதன்மையான முன்னுரிமை! எதிர்வினை மற்றும் சரி செய்தலை விட தடுத்தல் மற்றும் தயாராக இருத்தல் முக்கியம்."
பாஜக செய்தித் தொடர்பாளர் டாக்டர் சுபாஷ் சர்மா, சவாலை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த முயற்சிக்கு அழைப்பு விடுத்தார் மற்றும் ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.