எப்.16 போர் விமானத்தை பாகிஸ்தான் முறைகேடாக பயன்படுத்தியதாக வெளியான தகவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று கூறிய அமெரிக்கா, இதுக் குறித்து பல விவரங்களை வெளியிட்டு வருகிறது.
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்தயா அடித்து விரட்டியது. அப்போது இரு நாட்டு போர் விமானங்களும் பரஸ்பரமாக தாக்கிக் கொண்டன.
பாகிஸ்தான் விமானத்த்தின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குத்தலில் பாகிஸ்தான் விமானம் கீழே விழுந்தது. தாக்குதலுக்கு பாகிஸ்தான் எப்.16 போர் விமானத்தையும், AMRAAM ஏவுகணையையும் பயன்படுத்தியுள்ளதாக இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்தது. ஆனால் பாகிஸ்தான் இதனை மறுத்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பாகங்களிலுள்ள வரிசை எண், குறியீடு உள்ளிட்ட சில ஆதாரங்களை வைத்து இது எப்.16 ரக போர் விமானம் என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது.
எப்16 ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கராவதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால் ஒப்பந்த விதிகளை மீறி தற்போது எப்16- ரக போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது. மேலும் இந்த விவகாரத்தை அமெரிக்காவின் கவனத்துக்கு இந்தியா கொண்டு சென்றது.
இந்திய விமானப்படை தாக்கல் செய்த ஆவணத்தில், “பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்தமான் தனது மிக்-21 விமானத்தை அம்ராம் ஏவுகணை தாக்குவதற்கு முன்பாக, பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை ஆர்-73 ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தினார்” என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின்போது அபிநந்தன் மட்டுமே ஏவுகணையை பயன்படுத்தினார். பாகிஸ்தான் விமானம் அவரது விமானத்தை தாக்குவதற்கு முன்பாக, தான் பாகிஸ்தான் விமானத்தை தாக்கிவிட்டதாக தனது இறுதி ரேடியோ தகவலில் உறுதி செய்துள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் எப்-16 போர் விமானத்தை தவறாக பயன்படுத்திய உண்மை தெரியவந்துள்ளது.
எஃப் 16 ரக போர் விமானங்கள் அமெரிக்காவின் தயாரிப்புகளாகும். அந்த வகையில், இறுதி பயனாளிகள் ஒப்பந்தத்தின்படி எஃப் 16 ரக போர் விமானங்களை, தீவிரவாத ஒழிப்புக்காக உள்நாட்டுக்குள் தான் பயன்படுத்த வேண்டும்.
பதில் தாக்குதல், ஊடுருவலை தடுத்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் அமெரிக்காவின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தங்களை பாகிஸ்தான் மீறி விட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாகும். அதை பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.