பாகிஸ்தானில் அதிகனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவல்படி, மழை வெள்ளத்தால் இதுவரை 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜூன் 14 முதல் இதுவரை 388.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது வருடாந்திர சராசரியைவிட 190% அதிகம். இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உலக நாடுகள் உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். பல்வேறு நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவி செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட் 29) பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவு கவலை அளிக்கிறது. இயற்கைப் பேரிடரால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதற்கான
உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவி வழங்குவது உறுதியானால் 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு,
இயற்கைப் பேரிடர் காரணமாக பாகிஸ்தானுக்கு இந்தியா உதவி செய்வது இதுவே முதல் முறையாகும்.
காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பாகிஸ்தானுக்கு உதவி வழங்கப்பட்டது. 2010இல் ஏற்பட்ட வெள்ளத்திற்கும், 2005இல் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் இந்தியா உதவி செய்தது.
முன்னதாக, இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், வெள்ளத்தால் நாடு முழுவதும் பயிர்கள் நாசமடைந்துள்ளது. மக்களுக்கு வழங்க, காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்வது குறித்து அரசு ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த ஆண்டு ஏப்ரலில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமரான பிறகு, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் உறுதியுடன் இருப்பதாகவும், இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவை விரும்புவதாகவும் அவர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார்.
இருதலைவர்களும் கருத்து பரிமாறிக் கொண்டனர். காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வருமாறு ஷெரீப் மோடியை கேட்டுக் கொண்டார். இதன் மூலம் இரு நாடுகளும் வறுமை மற்றும் வேலையின்மையை சமாளிப்பதில் கவனம் செலுத்த முடியும் எனக் கூறினார்.
ஷெரீப்பை வாழ்த்திய மோடி, பயங்கரவாதம் இல்லாத, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இந்தியா விரும்புகிறது என பதில் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“