/indian-express-tamil/media/media_files/2025/05/08/JEgUPtBoTdFGfTqNOlBB.jpg)
Pakistan continues small arms, artillery fire along LoC; ‘Responded proportionately,’ says Indian Army
ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) அருகே உள்ள அக்னூர் செக்டார் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புகள் வியாழக்கிழமையும் சிறிய ரகம் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு முந்தைய நாள், இந்திய ராணுவம் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பூஞ்ச் மற்றும் ராஜௌரி மாவட்டங்களில் தீவிரமான எல்லை தாண்டிய தாக்குதல் நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "மே 7-8, 2025 இரவில், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் எந்தவிதமான தூண்டுதலும் இன்றி சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் பீரங்கி குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவம் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்தார் செக்டாரில் புதன்கிழமை இரவு பாகிஸ்தான் பீரங்கி மற்றும் சிறிய ரக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதல் வியாழக்கிழமை காலையும் தொடர்ந்தது. "நாங்கள் ஏற்கனவே நிலத்தடி பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்திருந்தோம். இருப்பினும், இந்த முறை குடியிருப்பு பகுதிகளில் அதிக குண்டுகள் விழவில்லை" என்று கிராமவாசி ஒருவர் கூறினார்.
குப்வாராவின் நௌகாம் செக்டாரிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில், உரி செக்டாரில் உள்ள பல்வேறு கிராமங்களை பாகிஸ்தான் துருப்புகள் பீரங்கிகளால் தாக்கினர். இருப்பினும், உயிர்ச்சேதம் அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை. புதன்கிழமை, உரி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில், குறிப்பாக சலாமாபாத்தில் 15 பொதுமக்கள் காயமடைந்தனர்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியா சிந்து நதி நீரை பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் துருப்புகள் ஒவ்வொரு இரவும் தூண்டுதல் இல்லாமல் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல்லிங்கில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே சிறிய ரக துப்பாக்கிகளுடன் தொடங்கிய இந்த தாக்குதல், புதன்கிழமை பீரங்கி சூடு வரை அதிகரித்தது. புதன்கிழமை பூஞ்ச் மற்றும் ராஜௌரி மாவட்டங்களில் நாள் முழுவதும் நடந்த ஷெல்லிங்கில் ஒரு ராணுவ வீரர் உட்பட பதின்மூன்று பேர் கொல்லப்பட்டனர். பல வீடுகள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்கள் சேதமடைந்ததால், பூஞ்ச் நகரத்திலிருந்து பலர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
புதன்கிழமை இரவு முதல் பூஞ்சில் ஷெல்லிங் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், எல்லை தாண்டிய தாக்குதல் எந்த நேரத்திலும் மீண்டும் தொடங்கலாம் என்ற கவலை அப்பகுதி மக்களுக்கு உள்ளது என்று உள்ளூர்வாசியான அப்தாப் அகமது கூறினார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு, பூஞ்ச், ராஜௌரி, ஜம்மு, சாம்பா மற்றும் கதுவா உள்ளிட்ட ஜம்மு மாகாணத்தின் ஐந்து எல்லை மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டிய தாக்குதல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே வசிக்கும் மக்களை வெளியேற்றி தங்க வைப்பதற்கான இடங்களை அடையாளம் கண்டு ஏற்பாடுகள் செய்யுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு மாகாணத்தின் அனைத்து எல்லை மாவட்டங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளையும் நிர்வாகம் அமைத்துள்ளது.
Read in English: Pakistan continues small arms, artillery fire along LoC; ‘Responded proportionately,’ says Indian Army
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.