சிறுபான்மையினரை எப்படி நடத்த வேண்டும் என பாகிஸ்தான் சொல்லித் தர வேண்டியதில்லை - முகமது கைஃப்

பாகிஸ்தானில் ஒருவர் அதிபராக வேண்டுமானால் அவர் முஸ்லீமாக இருக்க வேண்டும். இந்தியாவிலோ பல இனத்தை சேர்ந்த அதிபர்களை பார்த்துவிட்டோம் - அசாவுதீன் ஓவைசி

Pakistan PM Imran Khan Minorities Rights Comment : இந்த மாதத் தொடக்கத்தில், உத்தரப் பிரதேசம் மாவட்டத்தில் இருந்த புலந்த்ஷகர் என்ற பகுதியில் பசு வதைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், காவல் துறை அதிகாரி ஒருவரையும், மாணவர் ஒருவரையும் அடித்துக் கொன்றது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து, பிரபல இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா தன்னுடைய பயத்தினையும் கருத்தினையும் வெளிப்படுத்தினார்.

ஏற்கனவே வெறுப்பின் விசம் சமூகத்தில் பரவ துவங்கிவிட்டது. இனி மீண்டும் அதை பாட்டிலில் அடைத்து வைப்பது கடினம் என்றும், என் குழந்தைகளை இந்துவா முஸ்லிமா என்று கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாது என்றும் கூறியிருந்தார். இது தேசிய அளவில் பெரிய சர்ச்சையினை கிளப்பியது.

Pakistan PM Imran Khan Minorities Rights Comment

கடந்த 22ம் தேதி, பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் புதிய தலைமை உருவாகி 100 நாட்கள் ஆனதைத் தொடர்ந்து, வெற்றி விழா நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்று பேசினார்.

அப்போது நஸ்ருதீன் ஷா கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டி, “ நம் புதிய அரசின் நோக்கம், புதிய பாகிஸ்தானை உருவாக்குவதாகும். இங்கு பெரும்பான்மை மக்களுக்கு இருக்கும் அதே உரிமையினை சிறுபான்மை மக்களுக்கும் அளிக்க வேண்டும். அது தான் இந்நாட்டின் தந்தையான முகமது அலி ஜின்னாவின் கனவும் கூட. மேலும் சிறுபான்மையினரை எப்படி நடத்த வேண்டும் என்று நாம் மோடிக்கு எடுத்துக்காட்டாய் வாழ வேண்டும்” என்று கூறினார்.

இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் தற்போது பாதுகாப்பு இல்லாமலும், சுதந்திரமற்றும் வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டு பேசினார்.

 முகமது கைஃபின் எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், ட்விட்டர் பக்கத்தில் “இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எண்ணிக்கை 20% ஆனால் இன்றோ 2%. ஆனால் இந்தியாவில் சிறுபான்மையினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. சிறுபான்மையினர் நலன் பற்றி வகுப்பெடுக்கும் கடைசி நாடாக தான் பாகிஸ்தான் இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

அசாவுதீன் ஓவைசியின் கருத்து

இம்ரான் கானின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் (All India Majlis-e-Ittehad-ul Muslimeen – AIMIM ) கட்சியின் தலைவர் அசாவுதீன் ஓவைசியும், பாகிஸ்தானில் ஒருவர் அதிபராக வேண்டுமானால் அவர் முஸ்லீமாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் நாங்கள் பல இனத்தை சேர்ந்த அதிபர்களை பார்த்துவிட்டோம்.

இம்ரான் கான் இந்தியாவில் இருண்ட அரசியல் மற்றும் சிறுபான்மை நலன்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close