பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் இந்தியாவிற்குள் போதைப் பொருட்களைக் கொண்டு வருவதற்கு ஹைடெக் வழிகளை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் இந்தியாவிற்கு போதைப்பொருள் அனுப்புவதற்கு ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்று பாகிஸ்தான் அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பஞ்சாப் எல்லையில் அமைந்துள்ள கசூர் நகரில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் பாதுகாப்பு சிறப்பு உதவியாளர், மாலிக் முகமது அகமது கான் மூத்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஹமீத் மிருக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார். மாலிக் முகமது அகமது கான் கசூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டமன்ற உறுப்பினர் (MPA) ஆவார்.
இதையும் படியுங்கள்: ஐபோன் வாங்க 8 மாத குழந்தையை விற்ற தம்பதி: விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஜூலை 17 அன்று மாலிக் முகமது அகமது கான் ட்வீட் செய்த ஒரு வீடியோவில், கசூரில் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் குறித்து மாலிக் முகமது அகமது கானிடம் பத்திரிக்கையாளர் ஹமீத் மிர் கேள்வி கேட்கிறார், அதற்கு மாலிக் முகமது அகமது கான் அதை உறுதிப்படுத்தும் வகையில் பதிலளித்தார். "ஆம், அது (கடத்தல்) மிகவும் பயமாக இருக்கிறது" என்று மாலிக் முகமது அகமது கான் கூறினார். மேலும், “சமீபத்தில் ஒவ்வொரு ட்ரோனிலும் 10 கிலோ ஹெராயின் கட்டப்பட்டு நாடுகளின் குறுக்கே வீசப்பட்ட இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதை தடுக்க ஏஜென்சிகள் முயற்சி செய்கின்றனர்” என்றும் மாலிக் முகமது அகமது கான் கூறினார்.
வீடியோவை பகிர்ந்து, “பிரதமரின் ஆலோசகர் மாலிக் முகமது அகமது கானின் பெரிய வெளிப்பாடு இது. இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கசூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெராயின் கடத்தல்காரர்கள் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக சிறப்பு நிவாரணத்தை மாலிக் முகமது அகமது கான் கோரினார், இல்லையெனில் பாதிக்கப்பட்டவர்கள் கடத்தல்காரர்களுடன் சேருவார்கள்,” என்று ஹமீத் மிர் பதிவிட்டுள்ளார்.
கசூர் பஞ்சாபின் கெம்கரன் மற்றும் ஃபெரோஸ்பூரின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பஞ்சாப் காவல்துறை வெளியிட்ட தரவுகளின்படி, ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் மட்டும் ஜூலை 2022-2023 வரை NDPS சட்டத்தின் கீழ் 795 FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானை ஒட்டிய பஞ்சாப் மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாபில் உள்ள மூத்த BSF அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, இந்தப் பிரச்சினையை இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் எழுப்பிய போதிலும், ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் எல்லை தாண்டிய போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்கிறது என்று கூறினார்.
இந்த ஆண்டு மட்டும் 260 கிலோ ஹெராயின், 19 ஆயுதங்கள், 30 மேகசின்கள் (தோட்டாக்கள் பொருத்தப்படும் கருவி), 470 தோட்டாக்கள் மற்றும் 30 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் பஞ்சாபின் எல்லைப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தொலைபேசியில் பேசிய ஹமீத் மிர், மாலிக் முகமது அகமது கானின் கருத்துக்கள் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்படுவதை முதன்முறை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது என்று கூறினார். மாலிக் முகமது அகமது கானிடம் இருந்து இந்த ஒப்புதல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது என்றும் ஹமீத் மிர் கூறினார்.
“மாலிக் முகமது அகமது கான் கசூரின் MPA ஆவார், மேலும் அவர் பாகிஸ்தானில் உள்ள அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபனத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அவர் முந்தைய இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் தற்போதைய இராணுவ தளபதிக்கு மிகவும் நெருக்கமானவர்,” என்று ஹமீத் மிர் கூறினார்.
ட்ரோன்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் குறித்த கேள்வியைக் கேட்க அவரைத் தூண்டியது எது என்று கேட்டபோது, மூன்று பக்கங்களிலும் இந்தியாவால் சூழப்பட்ட கசூரில் சுற்றுப்பயணம் செய்ததாக ஹமீத் மிர் கூறினார்.
“இந்த கிராமவாசிகள் (கசூரில்) தங்களுக்கு மொபைல் சிக்னல்கள் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஆளில்லா விமானங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு மதுபானங்கள் கடத்தப்படுவது குறித்து அவர்கள் பேசிக் கொண்டனர். எல்லை தாண்டிய ட்ரோன் இயக்கங்களால் இங்குள்ள மொபைல் சிக்னல்கள் பாதுகாப்பு ஏஜென்சிகளால் ஜாம் (முடக்கம்) செய்யப்படுகின்றன என்று மாலிக் முகமது அகமது கான் என்னிடம் கூறினார்,” என்று ஹமீத் மிர் கூறினார்.
வீடியோ ஒளிபரப்பப்பட்ட பிறகு, மாலிக் முகமது அகமது கான் தனது நாட்டின் ஸ்தாபனத்திலிருந்து நிறைய விமர்சனங்களை எதிர்க் கொண்டதாக ஹமீத் மிர் கூறினார்.
"அவர் உள்ளூர் MPA மற்றும் அவர் இந்த பகுதிக்கு பிரதமர் வருகை தர முயற்சித்து வருகிறார். அவர் தனது கருத்துக்களுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டார்… மொபைல் போன் இணைப்பு இல்லாததால் அவர் தனது தொகுதியினரிடமிருந்து அதிக பின்னடைவை எதிர்கொள்கிறார், மேலும் போதைப்பொருள் கடத்தலின் உதாரணங்களை மேற்கோள் காட்டி அதை நியாயப்படுத்த முயன்றார்,” என்று ஹமீத் மிர் கூறினார்.
கருத்துகளுக்காக மாலிக் முகமது அகமது கானுக்கு அழைப்புகள் மற்றும் செய்திகள் அனுப்பிய நிலையில், எந்த பதிலும் கிடைக்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.