/indian-express-tamil/media/media_files/2025/04/28/uKE5l4Fld5zi5dKcY4eh.jpg)
எல்லையில் 4-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி!
காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய ராணுவம், பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசார் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்க இந்தியாவும் தயாராகி வருகிறது
இந்தியா ராஜ்ய ரீதியிலான நடவடிக்கையை அரசு எடுத்துவரும் வேளையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Pakistan violates ceasefire at LoC
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. எனினும், பாகிஸ்தான் தனது அடாவடி செயலை நிறுத்தியபாடில்லை. 4-வது நாளாக நேற்று இரவும் (ஏப்.27) எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பூஞ்ச் செக்டாரில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது.
குப்வாரா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுக்கு எதிரே உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தின என்று பாதுகாப்புத் துறை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சுனீல் பர்த்வால் தெரிவித்தார். உடனடியாக இந்திய வீரர்கள் விரைந்து திறம்பட பதிலடி கொடுத்ததாக லெப்டினன்ட் கர்னல் பர்த்வால் கூறினார்.உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், விவரங்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்த சில மணி நேரங்களுக்குள், பாகிஸ்தான் வீரர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் பல்வேறு இடங்களில் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற முதல் சந்திப்பில், இரு தரப்பினரும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் புனிதத்தைப் பேண ஒப்புக்கொண்டதாகவும், பிப்ரவரி 25, 2021 அன்று போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.