பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் பாகிஸ்தான் போர் தொடங்காது என்று உறுதியளித்திருக்கிறார்.
லாகூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் சீக்கிய சமூகத்தின் கூட்டத்தில் உரையாற்றிய இம்ரான் கான், "நாங்கள் ஒருபோதும் போரை ஆரம்பிக்க மாட்டோம். பாகிஸ்தான் மற்றும் இந்தியா இரண்டும் அணுஆயுத சக்திகள். இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தால் உலகம் ஆபத்தை எதிர்கொள்ளும்" என்றார்.
மேலும், "எந்தவொரு பிரச்சனைக்கும் போர் ஒரு தீர்வு அல்ல என்பதை நான் இந்தியாவுக்குச் சொல்ல விரும்புகிறேன். போரில் வெற்றி பெறுபவரும் தோல்வியுற்றவரே. போர் பிற பிரச்சினைகளுக்கு பிறப்பைத் தருகிறது” என்று பிரதமர் இம்ரான் கான் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை புது டெல்லி ரத்து செய்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது. இந்தியாவின் இந்த வரலாற்று நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் புது டெல்லியுடனான உறவுகளை குறைத்து, இந்திய ஹை கமிஷ்னரையும் வெளியேற்றியது.
பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது முந்தைய தொலைபேசி உரையாடலை நினைவு கூர்ந்த கான், "பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் இதேபோன்ற சூழல் நிலவுவதாக நான் அவரிடம் சொன்னேன். காலநிலை மாற்றம் குறித்து அவரிடம் சொன்னேன். நாம் ஒரு வெடிகுண்டு மீது அமர்ந்திருக்கிறோம். இந்த பிரச்சனையை நாம் கவனிக்கவில்லை என்றால் (காலநிலை மாற்றம்) நீர் பற்றாக்குறை இருக்கும் (இரு நாடுகளிலும்). காஷ்மீர் பிரச்சனையை நாம் ஒன்றாக உரையாடலின் மூலம் தீர்க்க முடியும் என்று நான் அவரிடம் சொன்னேன்." என்றார்.
பாகிஸ்தானுடன் பேசுவதற்கான முயற்சிகளுக்கு இந்தியாவில் இருந்து "எந்த பதிலும் இல்லை" என்ற தனது விரக்தியை வெளிப்படுத்திய கான் தொடர்ந்து பேசுகையில், "நான் எந்த முயற்சி எடுத்தாலும், ஒரு சூப்பர் சக்தியைப் போலவே செயல்பட்டு, இதை இப்படிச் செய்யுங்கள், அதைச் செய்யக்கூடாது (பேச்சுவார்த்தையை) என எங்களுக்கு ஆணையிடுகிறது." என்றார்.
பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்திருந்த பல சீக்கியர்களுக்கும் பாகிஸ்தான் விசாக்களை வழங்குவதாகவும், இதனால் அவர்கள் புனித இடங்களை பார்வையிட முடியும் என்றும் கூறினார்.
முன்னதாக, தனது நாட்டுக்கு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றிய இம்ரான் கான், "இரு அணு ஆயுத அண்டை நாடுகளுக்கிடையிலான ஆயுத மோதலானது முழு உலகிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று கூறியிருந்தார்.
காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கை "சட்டவிரோதமானது" என்று கூறிய கான், இது காஷ்மீர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சிம்லா ஒப்பந்தத்தை மீறுவதாகும். என்றார்.