ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் அறிவிப்பிற்கு எதிராக, இந்தியா ஐநா பொதுச்சபையில் வாக்களித்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் வலீத் அபு அலி, கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரும், ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவருமான ஹஃபீஸ் சயீத் உடன், ராவல்பிண்டியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டார். இதனால், இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த பேரணியை இஸ்லாமிய கட்சிகளின் கூட்டமைப்பான டிஃபா-இ-பாகிஸ்தான் கவுன்சில் ஏற்பாடு செய்தது. இந்த பேரணி இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக ராவல்பிண்டியில் உள்ள லியாகத் பாக் பகுதியில் நடைபெற்றது. இந்த இடத்தில்தான், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடைசியாக தான் கொலை செய்யப்படுவதற்கு முன் டிசம்பர் 27, 2007 அன்று பேரணியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட ஹஃபீஸ் சயீத், இந்த பேரணியில் காஷ்மீர் பிரச்சனையை முன்வைத்து அமெரிக்காவுக்கு எதிராகவும், இஸ்ரேல் பிரச்சனையை முன்வைத்து அமெரிக்காவுக்கு எதிராகவும் உரை நிகழ்த்தினார்.
வலீத் அபு அலி, ஹஃபீஸ் சயீத் உடன் பேரணியில் கலந்துகொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவவே, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், இதுகுறித்து பாலஸ்தீன அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவித்தார். இதுகுறித்து இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பாலஸிதீன அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் ரவீஷ் குமார் கூறினார்.
வரும் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திரமோடி பாலஸ்தீனத்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இச்சமயத்தில், இப்பிரச்சனை எழுந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவே, பிரதமர் மோடி பாலஸ்தீனத்துக்கு செல்வது முதன்முறையாகும்.