Pan card tamil news: 2020-ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் பொது மக்களுக்காக அரசாங்கம் எடுத்த பல நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இதில் கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து மக்களின் வீடுகளுக்கு கிடைக்கப்பெற்ற பல முக்கியமான ஆவணங்களை நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளது.
மேலும் நடப்பு ஆண்டு முடிவுக்கு வருவதால், அமைச்சகங்களால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களுடன் முக்கிய முயற்சிகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவின் மூலம் பார்க்கலாம் என்று நிதி அமைச்சகம் தனது ட்வீட்டர் பதிவில தெரிவித்துள்ளது.
இதில் பான் பெறுவதற்கான செயல்முறையை இன்னும் எளிமையாக்குவதற்கு, குறிப்பாக கொரோனா பாதிப்பு காலத்தில், உடனடி பான் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி மே 28, 2020 அன்று, ஆதார் எண் அடிப்படையிலான இ-கேஒய்சியைப் பயன்படுத்தும் உடனடி நிரந்தர கணக்கு எண் (பான்) வசதியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக தனிப்பட்ட அடையாளத்தைப் பெற விரும்பும் நபர்களுக்கு மட்டுமே இந்த வசதி பொருந்தும். இந்த வசதியை பயன்படுத்தும் நபர்கள் ஒரு சில கிளிக்குகளைப் பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களில் உங்களுக்கான பான் கார்டை பெற முடியும். இந்த செயல்முறையில், பேப்பர் இல்லாமல் விண்ணப்பதாரர்களுக்கு இ-பான் கார்டு இலவசமாக வழங்கப்படும்.
ஆதார் அடிப்படையில் உடனடி மின்-பான் பெறுவது எப்படி என்பதை பார்போம்:
1. முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Incometaxindiaefiling.Gov.In இல் உள்நுழைய வேண்டும்.
2. முதல் பக்கத்தின் இடது புறத்தில், ‘விரைவு இணைப்புகள்’ (குயிக் லிங்க்) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
3. அடுத்து சற்று கீழே, ‘இன்ஸ்டன்ட் இ-பான்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவேண்டும்.
4. ‘Apply உடனடி மின்-பான்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்
5. உடனடி மின்-பான் விண்ணப்பிக்க ஒரு படிவம் காண்பிக்கப்படும். அதில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் ஆதார் ஆவணத்துடன் பொருந்தக்கூடிய அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பி பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
6. இதற்குப் பிறகு, உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்லில் உள்ள மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையில் புதிய பான் ஒதுக்கப்படும்.
7. புதிய பான் கார்டில் உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் முகவரி பற்றிய பதிவுகள் இருக்கும்.
8. பான் ஒதுக்கப்பட்டதும், சில நாட்களுக்குள் தபால் மூலம் பான் கார்டு வீட்டிற்கு வரும்.
வருமான வரித் துறையின் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய மற்றொரு படியாக இன்ஸ்டன்ட் பான் வசதியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு மேலும் எளிதாக்குகிறது.
பான் கார்டு பெறுவதற்காக ஏஜெண்டுகளை நம்பி 500, 1000 என பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் உணருங்கள்.