மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மத குருக்களில் ஒருவரான ரவிதாஸ் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில் சாதிகள் கடவுளால் உருவாக்கப்படவில்லை. மாறாக பண்டிதர்களால் உருவாக்கப்பட்டது என்றார். மோகன் பகவத் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிடும் வகையில் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பகவத் பண்டிதர்கள் என்று கூறியது "அறிவுஜீவிகள்" என்று குறிப்பிடுவதாகவும்
"பிராமணர்கள் அல்ல" என்றும் விளக்கம் அளித்துள்ளது.
மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் பலர் பதிலளித்துள்ளனர். அதில் பகவத் பிராமணர்களின் அட்டூழியங்களை ஒப்புக்கொள்வது போல் தெரிகிறது என்று கூறினர். சாந்த் ரவிதாஸ் நிகழ்ச்சியில் பேசிய பகவத், உண்மையில் மட்டும் தான் கடவுள் இருக்கிறார் என்று ரவிதாஸ் கூறியுள்ளார். கடவுள் எல்லா உயிரினங்களிலும் இருக்கிறார். பெயர், நிறம் பார்ப்பது இல்லை. அனைவருக்கும் ஒரே திறன், மரியாதை. அனைவரும் தன் சொந்தம் என்றும் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, வேதங்களின் அடிப்படையில், பண்டிதர்கள் சொல்வது பொய். உயர்ந்த, தாழ்ந்த சாதி என்ற இந்தக் கற்பனையில் சிக்கி, வழி தவறிவிட்டோம். இந்த மாயை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
நேற்று ஆர்.எஸ்.எஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் சுனில் அம்பேகர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், பகவத் மராத்தி மொழியில் பேசினார். மராத்தியில் பண்டிட் என்பதற்கு அறிவுஜீவி என்று பொருள். அவரது பேச்சு சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், பகவத் எப்போதும் சமூக நல்லிணக்கத்தைப் பற்றி பேசுகிறார். அவர் சாந்த் ரவிதாஸின் அனுபவத்தைப் பற்றிப் பேசினார். அதை யாரும் தவறான சூழலில் எடுத்து சமூக நல்லிணக்கத்தை குழைக்க வேண்டாம். ஆர்எஸ்எஸ் எப்போதும் தீண்டாமைக்கு எதிராகப் பேசியதுடன், அனைத்து சமூகப் பிளவுகளுக்கும் எதிராகப் போராடுகிறது என்றார்.
பகவத்தின் கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முதலில் பதில் அளித்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
மனிதர்களுக்கு முன்பாக சாதி மற்றும் வர்ணத்தின் உண்மை என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள் என்றார்.
மேலும் அக்கட்சியை சேர்ந்த மற்றொரு தலைவர் சுவாமி பிரசாத் மௌரியா கூறுகையில், சாதி அமைப்பு பண்டிதர்களால் (பிராமணர்களால்) உருவாக்கப்பட்டது என்று கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் இப்போதாவது மதத்தின் போர்வையில் பெண்கள், பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அம்பலப்படுத்தியுள்ளார். ராம்சரித்மனாஸில் உள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை இப்போதாவது அகற்ற முன்வர வேண்டும் என வேண்டும் என்று கூறினார்.
பகவத்தின் கருத்து குறித்து ஓபிசி தலைவரும் உத்தரப் பிரதேச துணை முதல்வருமான கேசவ் பிரசாத் மவுரியா நேடியாக பதில் அளிக்க மறுத்தார். நான் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர். எங்கள் மரியாதைக்குரிய சர்சங்கச்சாலக் ஏதாவது கருத்து கூறினால் அதை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். அது எங்களுக்கு வழிகாட்டுதல் என்றார்.
பகவத்தின் கருத்துக்கள் மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான விளக்கம் ஒரு தந்திரமான தளத்தைக் காட்டுகின்றன. ஒரு பெரிய பிராமண அமைப்பாகப் பார்க்கப்படும் ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து தீண்டாமை மற்றும் சாதிப் பிரிவினைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. ஒன்றுபட்ட இந்து அடையாளத்தை உருவாக்குவதற்கான அதன் முயற்சிகளின் பின்னணியிலும் இது வெளிபடுகிறது.
முன்னதாக கடந்த மாதம் கர்நாடகா இணையதளம் ஒன்றில் பகவத் கூறியதை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டிருந்தது. அதில்,
தீண்டாமை, வேறுபாடுகள் மற்றும் சமத்துவமின்மை போன்றவை இந்து சமூகத்தின் முக்கிய பிரச்சனைகள். இந்த பிரச்சனைகள் வேதங்களில் இல்லை. இந்த பிரச்சனைகள் பல தலைமுறைகளாக நம் மனதில் இருந்து வருகின்றன, அவற்றின் தீர்வுவை காலம் சொல்லும். அவற்றை நம் மனதில் இருந்து அகற்ற நாம் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.