அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்ட இந்தியரை ப்ராக் அரசாங்கம் அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம் என்று செக் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று அந்நாட்டு நீதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
52 வயதான நிகில் குப்தாவை அமெரிக்காவுக்கு அழைத்து செல்வது தொடர்பான இறுதி முடிவு, இந்த வழக்கில் அனைத்து தரப்பினருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் நீதித்துறை அமைச்சர் பாவெல் பிளாசெக்கின் கைகளில் இருக்கும் என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதியை கொலை செய்ய இந்திய அரசு அதிகாரி ஒருவருடன் இணைந்து செயல்பட்டதாக குப்தா மீது அமெரிக்க மத்திய அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குப்தா கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து ப்ராக் சென்றபோது செக் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். செக் செய்தி இணையதளமான http://www.seznamzpravy.cz, மேல்முறையீட்டு முடிவைப் பற்றி முதலில் தெரிவித்தது. தான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், அமெரிக்கா தேடும் நபர் தான் இல்லை என்றும் குப்தா வாதிட்டார். இந்த வழக்கை அரசியல் என்று அவர் கூறினார்.
"அமைச்சரின் முடிவிற்கான காலக்கெடுவை இப்போது கூற முடியாது," என்று நீதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். அமெரிக்காவுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை தடுக்க குப்தா அனைத்து விதத்திலும் செயல்படுவர் என்று எதிர்பார்க்கலாம் என்றார்.
கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் சந்தேகம் இருந்தால், உச்ச நீதிமன்றத்தை நாட அமைச்சருக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். ப்ராக் உயர்நீதிமன்றம் குப்தாவின் மேல்முறையீட்டை நிராகரித்தது. கடந்த டிசம்பர் மாதம் கீழமை நீதிமன்றம் குப்தா அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து குப்தா மேல்முறையீடு செய்தார் இந்த மனுவை ப்ராக் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ப்ராக் உயர் நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் உடனடியாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அமெரிக்காவின் ஒப்படைப்பு கோரிக்கைகளுக்கு செக் குடியரசு கடந்த காலத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. குப்தாவின் வழக்கறிஞர் கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. குப்தாவை நாடு கடத்த வேண்டாம் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொள்வதாகவும், மேலும் இந்த வழக்கை அரசியலமைப்பு நீதிமன்றத்தில் எடுத்துச் செல்வதாகவும் வழக்கறிஞர் கூறியதாக செக் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/czech-court-rules-nikhil-gupta-can-be-extradited-to-us-9118246/
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“