பாரடைஸ் பேப்பர்ஸ்: வரியை ஏமாற்றி வெளிநாடுகளில் சொத்துகளை குவித்த 714 இந்தியர்கள் சிக்கினர்!

சன் டிவி - ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, எஸ்ஸார்- லூப் 2ஜி வழக்கு, எஸ்என்சி - லாவலின் ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

By: Updated: November 6, 2017, 04:11:44 PM

பண மிதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு, 8ம் தேதியோடு முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த நாளை எதிர்கட்சிகள் கறுப்பு தினமாக அனுஷ்டிக்க அழைப்பு விடுத்துள்ளது. ஆளும் கட்சி தரப்பில் கருப்பு பண எதிர்ப்பு தினமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், மிகப்பெரிய அளவிலான வரி ஏய்ப்பு செய்து, கருப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியது குறித்த  தகவல்கள் ‘பாரடைஸ்’ பேப்பர்ஸ்’ எனும் பெயரில் கசிந்துள்ளது. பெர்முடா நாட்டின் ‘ஆப்பிள்பை’ நிறுவனம், சிங்கப்பூரின் ஏசியாசிட்டி நிறுவனம் ஆகியவை இந்தியா உட்பட உலகமெங்கிலும் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ய உதவியுள்ளது. சொத்துக்களும் வாங்கிக் கொடுத்துள்ளது.

வெளிநாட்டு சட்ட உதவி மையமான ஆப்பிள்பை நிறுவனத்திடம் இருந்து ரகசியமாகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆவணங்கள் ஆகியவற்றின் மூலம், பல இந்தியர்கள் உட்பட, கார்பரேட் நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை எப்படி வரி ஏய்ப்பு செய்து சொத்துக்களைச் சேர்த்துள்ளது என்ற விபரங்கள் கிடைத்துள்ளது.

பனாமா பேப்பர்ஸ் வெளியாகி 18 ஆண்டுகளாகிறது. பல பிரபலங்கள் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் சொத்து சேகரித்த விபரம் வெளியானது. அதன் அதிர்வலைகளே இன்னுமும் குறையவில்லை. இந்நிலையில், 13.4 மில்லியன் பக்கங்கள் கொண்ட இந்த பாரடைஸ் பேப்பர்ஸ் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் ஜெர்மன் செய்தித்தாளான ‘சுடூஸ்ச்சே செய்டங்’ மூலம் பெறப்பட்டு, புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ)மூலம் விசாரிக்கப்பட்டுள்ளது. 96 புதிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த விசாரணை நடந்தது.

இந்தியாவில், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பனாமா பேப்பர்சை விசாரித்தது போல், இந்த புதிய தகவல்களையும் கடந்த 10 மாதங்களாக விசாரித்து வந்தது. இந்த விசாரணையின் முடிவில், மொத்தம் 40 பக்க புலனாய்வு அறிக்கைகளை இன்று முதல் வெளியிட ஆரம்பித்துள்ளது.

பெர்முடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஆப்பிள்பை. 119 வயது பழமையானது.
இதில், உலகமெங்கிலும் உள்ள வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், வங்கியாளர்கள் மற்றும் இதர துறையைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிறுவனம், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் மற்றும் ஆஃப்ஷோர் கம்பெனிகளை (வெளிநாடுகளில் உருவாக்கப்படும் கம்பெனிகள்) நிர்வகிக்கிறது. வரி செலுத்தாமல் தவிர்க்க அல்லது தப்பித்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்கிகிறது. ரியல் எஸ்டேட் சொத்துகளை நிர்வகிப்பதிலும், ‘எஸ்க்ரோ’ அக்கவுண்ட்களை திறக்கவும், குறைந்த வரியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் வாங்கவும் இந்நிறுவனம் துணை புரிகிறது.

ஆப்பிள்பை நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களுக்கு, சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி வரிகள் செலுத்துவதை தவிர்க்க உதவுகிறது.

மொத்தம் 180 நாடுகளைச் சேர்ந்தவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் உள்ள பெயர்கள் எண்ணிக்கையில் பார்த்தால், இந்தியா 19-வது இடத்தில் உள்ளது. அதில் மொத்தமாக 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், ஆச்சர்யப்படும் விதமாக, இந்திய நிறுவனமான, நந்த் லால் கெம்கா என்பவரால் உருவாக்கப்பட்ட சன் க்ரூப் நிறுவனம், ஆப்பிள் பை நிறுவனத்தின் இரண்டாவது மிகப்பெரிய சர்வதேச வாடிக்கையாளராக உள்ளது. மேலும் 118 ஆஃப்ஷோர் நிறுவனங்களும் இந்த பட்டியலில் உள்ளன.

ஆப்பிள்பை நிறுவனத்தின் இந்திய வாடிக்கையாளர்கள், பல முக்கிய நிறுவனங்கள், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) கண்காணிப்பில் உள்ளன.

சன் டிவி – ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, எஸ்ஸார்- லூப் 2ஜி வழக்கு, கேரள முதல்வர் பிணராயி விஜயனின் பெயர் அடிபட்ட(பின்னர் விடுவிக்கப்பட்டார்) எஸ்என்சி – லாவலின் ஆகிய நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த ஆம்புலன்ஸ் ஊழலில் சிக்கிய ‘சிகிஸ்டா ஹெல்த்கேர் நிறுவனம், சிபிஐ வசமுள்ள வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தலைவர் ஒய்எஸ் ஜகன் மோகன் ரெட்டி ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சிபிஐ அனுப்பிய ரகசிய கடிதங்களும் ஆப்பிள்பையிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களைத் தாண்டி, தனிப்பட்ட நபர்களின் தகவல்களும் இந்த பாரடைஸ் பேப்பர்ஸில் கசிந்துள்ளன.

அமிதாப் பச்சன், பெர்முடாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் 2004ம் ஆண்டு முன்பே பங்குதாரராக இருந்துள்ளார். 2004ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தாராளமயமாக்கல் நடவடிக்கையைத் தொடர்ந்து, நீரா ராடியா, திரைப்பட நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி தில்னாஷின், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா ஆகியோர் செய்த பண பரிவர்த்தனையும் இடம் பெற்றுள்ளது. ‘ஒமிட்யார்’ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பெயர் உள்ளது. பிஜேபி ராஜ்யசபா எம்.பி. மற்றும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு சேவைகள் நிறுவனர் (எஸ்.ஐ.எஸ்) ஆர்.கே. சின்ஹா மால்டா பட்டியலில் உள்ளார்.

மேலும், இங்கிலாந்தில் பதுங்கியுள்ள விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் லிமிடட் இந்தியாவின், ஆஃப் ஷோர் கம்பெனிகள் மூலம் வாங்கப்பட்ட மில்லியன் டாலர்கள் கடன்களை, டியாகோ நிறுவனம் தள்ளுபடி செய்தது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பாரடைஸ் பேப்பர்ஸில் இடம்பெற்றுள்ளது.

வருமான வரித்துறை மூலம், கடந்த வருடம் ஜிஎம்ஆர் (GMR) க்ரூப்பில் ரெய்டு நடைபெற்றது. அந்த நிறுவனம், ஆப்பிள்பை மூலம் அமைக்கப்பட்ட 28 ஆஃப்ஷோர் நிறுவனங்கள் உதவியோடு, வரி ஏய்ப்பு செய்துள்ள ஆவணங்கள் சிக்கியுள்ளது. இந்திய நிறுவனங்களான ஜிண்டால் ஸ்டீல், அப்போலோ டயர்ஸ், ஹேவல்ஸ், ஹிந்துஜாஸ், எமார் எம்.ஜி.எப், வீடியோகான், ஹிரானந்தனி மற்றும் டி எஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்களின் பெயரும் பாரடைஸ் பேப்பரில் உள்ளது.

சர்வதேச தொடர்புகள்:

சர்வதேச நிறுவனங்களில், ரஷிய நிறுவனங்கள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் செய்த முதலீடுகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக செயலாளரும், பில்லியனருமான வில்பர் ரோஸ் பெயரும் உள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் தலைமை நிதியளிப்பாளர் நடத்திய ரகசிய ஒப்பந்தங்கள், இங்கிலாந்தின் மகாராணி, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் சௌகத் அசிஸ் உட்பட 120 அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழில் அன்பரசன் ஞானமணி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Paradise papers biggest data leak reveals trails of indian corporates in global secret tax havens

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X