சாராய சக்கரவர்த்தி விஜய் மல்லையா, தன் மீதான பொருளாதார மோசடிப் புகார்களில் இருந்து சுலபத்தில் மீள முடியாது போல! காரணம், சர்வதேச கருப்புப் பண முதலைகளை அம்பலப்படுத்தியிருக்கும் ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’, விஜய் மல்லையாவையும் விட்டு வைக்கவில்லை.
உலக கருப்புப் பண முதலைகளை அம்பலப்படுத்தும் புதிய ஆவணங்கள், ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கின்றன. சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட இந்த ஆவணங்களையொட்டி, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மேற்கொண்ட கூடுதல் புலனாய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஏற்கனவே கருப்புப் பண முதலைகளை தோலுரித்த ‘பனாமா பேப்பர்ஸை’விட கூடுதல் அதிர்வைத் தரும் ஆவணங்களாக இவை இருக்கின்றன.
இந்தியாவில் பொருளாதார மோசடிகளுக்காக தேடப்படும் நபராக இருந்து வரும் விஜய் மல்லையாவுக்கு, ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ இன்னும் நெருக்கடியை அதிகமாக்கியிருக்கிறது. இந்த நிமிடம் வரை இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்படாமல் லண்டனில் விஜய் மல்லையா பதுங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மல்லையா கடந்த 2013-ம் ஆண்டு தனது ‘யுனைட்டட் ஸ்பிரிட் லிமிடெட் இந்தியா’ (யு.எஸ்.எல்) நிறுவனத்தை ‘டியாஜியோ’ குழுமத்திற்கு விற்றார். இதை வாங்கிய ‘டியாஜியோ’, சிக்கலான பல நிறுவனங்களின் தொகுப்பாக ‘யு.எஸ்.எல்’ இருப்பதை உணர்ந்தது. எனவே அந்த நிறுவன அமைப்பை எளிமைப்படுத்த முடிவு செய்தது. இதற்காக லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் ‘லிங்க்லேட்டர்ஸ் எல்.எல்.பி’ என்கிற சட்ட நிறுவனத்தின் உதவியை ‘டியாஜியோ’ நாடியது.
ஆனால் அப்படி சிக்கலான தொகுப்பாக ‘யு.எஸ்.எல்’ வடிவமைக்கப்பட்டதற்கு காரணம் இருந்தது. அதாவது, யு.எஸ்.எல். ஹோல்டிங்ஸ் லிமிடெட் (பி.வி.ஐ) மற்றும் 3 சார்பு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்வதற்காகவே அந்த வடிவமைப்பு இருந்ததாக ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன.
மேற்படி யு.எஸ்.எல். ஹோல்டிங்ஸ் லிமிடெட் (பி.வி.ஐ), வரிச் சலுகைகளின் சொர்க்கபுரியான இங்கிலாந்தின் விர்ஜின் தீவில் பதிவான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதர 3 நிறுவனங்களான யு.எஸ்.எல். ஹோல்டிங்ஸ் (யு.கே) லிமிடெட், யுனைடட் ஸ்பிரிட்ஸ் (யு.கே) லிமிடெட், யுனைட்டட் ஸ்பிரிட் (கிரேட் பிரிட்டன்) லிமிடெட் (யு.கே) ஆகியனவும் இங்கிலாந்தில் பதிவு பெற்றவைதான்.
இந்த சிக்கலான வடிவமைப்பை மாற்ற பணிக்கப்பட்ட ‘லிங்க்லேட்டர்ஸ் எல்.எல்.பி’, இந்தப் பணிகளில் கில்லாடியான ‘ஆப்பிள்பை’ நிறுவனத்தை தனக்கு துணையாக சேர்த்துக்கொண்டது. அந்த ‘ஆப்பிள்பை’ நிறுவன ஆவணங்கள்தான் தற்போது ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ஸாக அனைத்து வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறது.
‘ஆப்பிள்பை’ ஆவணங்களின்படி, யு.எஸ்.எல் நிறுவனத்தில் இருந்து 4 துணை நிறுவனங்களுக்கும் 1.5 பில்லியன் டாலர் பணம் கடன் என்ற பெயரில் திருப்பிவிடப்பட்டிருப்பது தெரியவருகிறது. இந்திய மதிப்பில் இது ரூ 10,000 கோடி! கடந்த 2014 வரை மொத்தம் 7 ஆண்டுகளில் இந்தத் தொகை பறிமாறப்பட்டிருக்கிறது.
யுனைட்டட் ஸ்பிரிட்ஸ்-ஐ கையில் எடுத்து, 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த அமைப்பு மாற்ற முயற்சிகளில் ‘டியாஜியோ’ இறங்கியது. அதாவது, முறைகேடான பணப் பரிமாற்றத்திற்கு பயன்பட்ட நிறுவனங்களின் பிடியில் இருந்து யுனைட்டட் ஸ்பிரிட்ஸ்-ஸை விடுவிப்பதாக அதன் திட்டம் சொல்லப்பட்டது. ஆனால் இந்த நடைமுறை மேற்படி சார்பு நிறுவனங்களில் 1.5 பில்லியன் டாலர் கடனையும் தள்ளுபடி செய்வதில் போய் முடிந்தது.
யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் அமைப்பு மாற்ற ஆவணங்களின் படி பார்த்தால், விஜய் மல்லையாவின் வாட்ஸன் லிமிடெட் நிறுவனத்தையும் இதேபோல 5.8 மில்லியன் டாலர் கடனில் இருந்து ‘டியாஜியோ’ விடுவித்திருக்கிறது. ஒப்பந்தங்களில் ஒருவருக்கு பதிலாக இன்னொருவரை அமர்த்தும் ஒருவித ‘நோவேஷன்’ என்கிற செயல்பாடு மூலமாக இந்த கடன் தள்ளுபடியை செய்து முடித்திருக்கிறார்கள்.
இந்தக் கடன் தள்ளுபடி மற்றும் ‘நோவேஷன்’ மூலமாக 1225 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மல்லையா வெளியே கொண்டு போய்விட்டதாக ‘டியாஜியோ’ பங்கு பரிவர்த்தனை தொடர்பான அமைப்புக்கு தகவல் தெரிவித்திருக்கிறது. ஆனால் ‘ஆப்பிள்பை’ ஆவணங்கள் அடிப்படையில் அந்தத் தொகை ரூ 10,000 கோடியாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது. யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் உள் நிறுவனங்களின் கடன்களை கணக்கு முடிக்கவே இந்த அமைப்பு மாற்றத்தையே ‘டியாஜியோ’ மேற்கொண்டதாக ‘ஆப்பிள்பை’ ஆவணங்கள் கூறுகின்றன.
இந்தக் கடன் தள்ளுபடி குறித்து ‘டியாஜியோ’ செய்தி தொடர்பாளரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தொடர்புகொண்டு கேட்டபோது, ‘மார்ச் 31, 2015 நிலவரப்படி, யு.எஸ்.எல். ஹோல்டிங்ஸ் லிமிடெட் (பி.வி.ஐ) நிறுவனத்திற்கு வட்டியில்லாக் கடன் 4941 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. 2014-ல் 4793 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. நீண்டகால முதலீடாக இதை செய்திருக்கிறோம். கடன் வாங்கிய துணை நிறுவனம் செலுத்த முடியாத சூழலில் இருக்கும்போது, இந்தத் தள்ளுபடி வழக்கமானதுதான்’ என்றார்.
லண்டனில் இருந்து விஜய் மல்லையா அழைத்து வரப்படும்போது, ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ அம்பலப்படுத்தியிருக்கும் விவகாரங்களும் அவரிடம் கேள்விகளாக எழும்.
தமிழில் : ச.செல்வராஜ்