Advertisment

பாரடைஸ் பேப்பர்ஸ்: அமிதாப் பச்சன் பங்குதாரராக இருந்த பெர்முடா நிறுவனம் மூடப்பட்டது!

பாரடைஸ் பேப்பர்ஸ் மூலம் அமிதாப் பச்சன், ஜல்வா மீடியா லிமிட்டட் எனும் பெர்முடா நிறுவனத்தில் பங்குதாரராக இருந்திருப்பது தெரிய வந்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாரடைஸ் பேப்பர்ஸ், அமிதாப் பச்சன்

பாரடைஸ் பேப்பர்ஸ், அமிதாப் பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இவர் 2000-01 ஆண்டில் புகழ்பெற்ற டிவி ரியாலிட்டி ஷோவான 'கௌன் பனேகா குரோர்பதி' தொகுத்து வழங்கினார். முதல் சீசன் முடிந்து ஒரு வருடம் கழித்து, 2002-ஆம் ஆண்டு பெர்முடாவின் டிஜிட்டல் மீடியா கம்பெனியின் பங்குதாரரானார். 2004-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்திற்கு முன்பு, இந்திய நாட்டின் பிரஜை, வெளிநாடுகளில் முதலீடு செய்ய வேண்டுமெனில், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும். ஆனால், வெளிநாடுகளில் பங்குதாரர்களாக இருப்பது குறித்த தெளிவான அறிக்கை வெளியிடப்படவில்லை.

Advertisment

இந்த நிலையில், தற்போது 'பாரடைஸ் பேப்பர்ஸ்' எனும் பெயரில், வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்து, ஆப்பிள்பை எனும் நிறுவனத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணங்களின் படி, அமிதாப் பச்சன் மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கு முதலீட்டாளர் நவீன் சத்தா ஆகியோர், ஜல்வா மீடியா லிமிட்டட் எனும் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிறுவனத்தில், ஜூன் 19, 2002-ஆம் ஆண்டு இவர்கள் பங்குதாரர்களாக இணைந்திருக்கின்றனர். பெர்முடாவில் ஜூலை 20, 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 2005-ஆம் ஆண்டு மூடப்பட்டிருக்கிறது.

https://www.youtube.com/embed/VTps5s_JLhQ

ஜனவரி 2000-ஆம் ஆண்டு, நான்கு இளம் தொழிலதிபர்கள் மூலம் ஜல்வா மீடியா நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. முதலில் ஜல்வா.காம் எனும் பெயரில் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிறுவனம், பின்னர் ஜல்வா மீடியா இந்தியா பிரைவேட் லிமிட்டட் என்று மாற்றப்பட்டது. தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஜல்வா மீடியா லிமிட்டட் என்று பெர்முடாவில் உருமாற்றம் பெற்று தொடங்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.

ஜூலை 2000-ஆம் ஆண்டு, $3.2 மில்லியன் தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ஜல்வா - இந்தியா தெரிவித்தது. சிலிக்கான் பள்ளத்தாக்கில் முன்னணி தொழில் அதிபர் மற்றும் பிஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள நவீன சத்தா இத்தொகையை முதலீடு செய்ததாக ஜல்வா நிறுவனம் அறிவித்தது. மேலும், நிதியை அதிகப்படுத்த 15 மில்லியன் டாலரை குறுகிய கால இலக்காக ஜல்வா நிர்ணயித்தது.

லண்டனின் மில்லீனியம் டோம் பகுதியில் இருந்து சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை இன்டர்நெட்டில் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் ஒப்பந்தத்தில் ஜல்வா மீடியா கையெழுத்து இட்டிருந்தது. இந்நிறுவனம், தேக்கோஃபில்ம்.காம் என்ற வெப்சைட்டை அக்டோபர் 2000-ஆம் ஆண்டு தொடங்கி, ஜூன் 2001-ல் ஐபிஎம் நிறுவனத்துடன் அதனை இணைத்தது. "ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான முழுமையான உள்ளடக்க மேலாண்மை தீர்வுக்காக" இது தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மும்பையில் தனது டிஜிட்டல் மீடியா கண்டுபிடிப்பு ஆய்வகத்தையும் ஜல்வா நிறுவனம் அமைத்தது.

ஐபிஎம் உடனான இணைப்பிற்கு பிறகு, அமிதாப் பச்சன் மற்றும் சத்தா ஆகிய இருவரும், ஜல்வா- பெர்முடா நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்ததாக தற்போது வெளியாகியுள்ள ஆப்பிள்பை தகவல் கசிவில் தெரிய வந்துள்ளது. இதன் பின், ஜல்வா நிறுவனம் தொடர்ந்து அழிவுப் பாதையில் பயணித்தது. அந்நிறுவனத்தின் உர்ஷித் பரிக் தனது பதவியை ராஜினாமா செய்து குவாகோ நிறுவனத்தில், நவம்பர் 2001-ல் பணிக்கு சேர்ந்தார். இதன்பின், கெளதம் ஆனந்த் செப்டம்பர் 2003-ஆம் ஆண்டும், ஷைலேந்திர ஜே சிங் ஜூலை 2004-ஆம் ஆண்டு பதவி விலகினர்.

அக்டோபர் 28, 2005-ஆம் ஆண்டு, தி பெர்முடா சன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட நோட்டீசில், ஜல்வா-பெர்முடா நிறுவனம், 'மோசமான கடனாளி' என்றும், 'விரைவில் கலைக்கப்பட வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்பிள்பை தகவலில் இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இந்நிறுவனத்துடனான உறவை ஜனவரி 14, 2004-ஆம் ஆண்டு ஏற்கனவே ஆப்பிள்பை நிறுவனம் துண்டித்து இருந்தது குறிப்பிடத்தகது.

ஜூலை 2005-ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமும், வணிக செயல்முறை அவுட்சோர்ஸிங் நிறுவனமுமான கேனியம் இன்க், ஜல்வா மீடியாவின் வாடிக்கையாளர்கள் ஒப்பந்தத்தை வாங்கிக் கொண்டது.

இறுதியில், 2016-ஆம் ஆண்டு ஜல்வாமீடியா.காம் தளமானது, 2016 ஆண்டுக்கான பதிப்புரிமை முத்திரையுடன் காணப்பட்டது. இந்த வெப் பேஜின் நடுவே, 'Passionately Inspired' என்ற வார்த்தை மட்டும் இடம்பெற்றிருந்தது. வேறு எந்த பதிவோ அல்லது செயல்பாடோ அந்த இணையதள பக்கத்தில் இடம்பெறவேயில்லை.

தமிழில் அன்பரசன் ஞானமணி

Amitabh Bachchan Paradise Papers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment