Parliament Budget session 2022 President address: பட்ஜெட் கூட்டத்தொடர் 2022: “கொரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தியாவின் திறன் அதன் தடுப்பூசி திட்டத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு வருடத்திற்குள், 150 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளோம். இதுவரை, கொடுக்கப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை நாம் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம்" என்று கொரோனா வைரஸூக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பாராட்டியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் வரவேற்றுப் பேசுகையில், இந்த கூட்டத்தொடர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகிற்கு எடுத்துரைக்கும் என்று கூறினார். மேலும், “இன்றைய உலகளாவிய சூழ்நிலையில், இந்தியாவுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த கூட்டத்தொடர், நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தடுப்பூசி திட்டம் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து உலகில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது, ”என்றும் பிரதமர் கூறினார்.
ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரபரப்பான பிரச்சாரத்துக்கு மத்தியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் இன்று தொடங்குகிறது. லோக்சபா அட்டவணையின்படி, காலை 11 மணிக்கு மத்திய மண்டபத்தில் ஜனாதிபதி உரையுடன் அமர்வு தொடங்கியது.
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியதாவது: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குத் தலைவணங்குகிறேன். சுதந்திரத்தின் 75 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஆளுமைகளையும் நான் மரியாதையுடன் நினைவுகூருகிறேன் என்று தொடங்கினார்.
கொரோனா வைரஸூக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தைப் பாராட்டிய ஜனாதிபதி, “கொரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தியாவின் திறன் அதன் தடுப்பூசி திட்டத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு வருடத்திற்குள், 150 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளோம். இதுவரை கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம் என்றார்.
அடுத்ததாக “யாரும் பசியுடன் வீடு திரும்பக்கூடாது என்பதற்காக, பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்கு எனது அரசு இலவச ரேஷன் விநியோகம் செய்தது. இன்று, இந்தியா உலகின் மிகப்பெரிய உணவு விநியோக திட்டத்தை நடத்தி வருகிறது. மேலும், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஏழைகளுக்கு பயனளித்துள்ளது. ஜன் ஔஷதி கேந்திராவில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதும் ஒரு சிறந்த நடவடிக்கையாகும் என்று மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜனாதிபதி, தெருவோர வியாபாரிகளின் நலனுக்காக எனது அரசு பிரதமர் ஸ்வாநிதி யோஜனா திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இதுவரை 28 லட்சம் தெருவோர வியாபாரிகள் ரூ.2,900 கோடி மதிப்பிலான நிதியுதவியைப் பெற்றுள்ளனர். இப்போது இந்த விற்பனையாளர்களை ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு இணைக்கிறது. எனது அரசாங்கம் JAM என்ற மும்மூர்த்திகளான ஜன்தன்-ஆதார்-மொபைல் இணைப்பு மூலம் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரமளிப்பின் தாக்கத்தையும் நாம் காணலாம். இதனால், தொற்றுநோய்களின் போது ஆயிரக்கணக்கான மக்கள் நேரடி பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளனர் என்று கூறினார்.
அடுத்ததாக, பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதை பட்டியலிட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “பெண்களுக்கு அதிகாரமளிப்பது எனது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். உஜ்வாலா யோஜனாவின் வெற்றிக்கு நாம் சாட்சிகள். முத்ரா யோஜனா மூலம், பெண்களின் தொழில்முனைவு மற்றும் திறன்கள் ஊக்கம் பெற்றுள்ளன. "பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ" மூலம், பல நேர்மறையான முடிவுகள் முன்னுக்கு வந்துள்ளன. மேலும், மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம அந்தஸ்து வழங்கும் முயற்சியில், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை எனது அரசு தாக்கல் செய்துள்ளது என்று கூறினார்.
விவசாயிகள் குறித்து கூறுகையில், நாட்டின் வளர்ச்சியில் நமது சிறு விவசாயிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. எனது அரசாங்கம் எப்போதும் 80 சதவீத சிறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் ஒரு பகுதியாக, இன்றுவரை 11 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளது என குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் செயல்திறனைப் பாராட்டிய குடியரசுத் தலைவர், “டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் இளைஞர் சக்தியின் திறனைப் பார்த்தோம். இதுவரை இல்லாத வகையில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது. டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் இந்தியா 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது” என்றார்.
நாட்டில் கல்வியை மேம்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் சிறந்த வாய்ப்புகளை வழங்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள 7 மருத்துவக் கல்லூரிகள் தவிர, 2 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பெண்களின் கற்றல் திறனை அதிகரிக்க, தேசிய கல்விக் கொள்கையில் பாலின சேர்க்கை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் உள்ள 33 சைனிக் பள்ளிகளிலும் பெண்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது பெருமைக்குரியது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண் வீரர்களை சேர்ப்பதற்கும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பெண் வீரர்களின் முதல் தொகுதி ஜூன் 2022 இல் அனுமதிக்கப்படும், என்று கூறினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு அரை மணி நேரம் கழித்து, மக்களவையில் வணிகப் பரிவர்த்தனை நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 8 ஆம் தேதி முடிவடைகிறது, இதில் முதல் பகுதி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும். பட்ஜெட் ஒதுக்கீடுகளை நிலைக்குழு ஆய்வு செய்வதால் பிப்ரவரி 12 முதல் மார்ச் 13 வரை இடைவேளை இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.