ஜூலை 18ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 10ம் தேதி வரை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அந்த 20 மசோதக்களில் 6 மசோதாக்கள் நிதித்துறை சார்ந்த மசோதாக்கள் ஆகும்.
2018ம் ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடர்
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது தான் இந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் மிக முக்கிய நிகழ்வாகும்.
மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் நாராயண சிங் வெற்றி பெற்றார்.
12 வயதிற்குட்ப பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தருபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் போன்ற மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்த 2018ம் ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடர் மட்டும் சுமார் 18 அமர்வுகளைக் கொண்டிருந்தது.
நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஒரு பார்வை
குற்றவியல் சட்ட திருத்த மசோதா - 2018:
இந்த மசோதா பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தாக்கல் செய்யப்பட்ட மிக முக்கியமான மசோதாவாகும். அதன்படி 12 வயதிற்கு உட்பட பெண் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் குற்றாவாளிக்கு மரண தண்டனை அளிக்கப்படும். மாநிலங்களவையில் இம்மசோதா ஆகஸ்ட் 6ம் தேதி நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் ஜூலை 30ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018:
இம்மசோதா மக்களவையில் ஜூலை 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் ஜூலை 25ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலம், இந்தியாவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளியேறும் பெரும் முதலாளிகளின் சொத்துக்களை முடக்கலாம்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மசோதா 2017 (123வது திருத்தம்)
பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை காப்பதற்காக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ( The National Commission for Backward Classes (NCBC) ) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதா இது. ஆகஸ்ட் 2ம் தேதி மக்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் 6ம் தேதி இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட திருத்த மசோதா
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவர் மீது தொடக்கப்படும் வன்முறைகளுக்கு முடிவு கட்டும் வகையில் 1989ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் கொடுக்கும் புகார்களுக்கு உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.
இச்செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஆனால் மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் முதல்கட்ட விசாரணை ஏதுமின்றி குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தலுக்கு தடை விதித்தும் முன்ஜாமீனிற்கு வழி வகை செய்தும் தீர்ப்பளித்தது. இச்சட்டத்தை மாற்றக்கோரி வைக்கப்பட்ட இச்சட்டத் திருத்த மசோதாவை இரண்டு அவைகளும் மறுப்புகள் ஏதுமின்றி நிறைவேற்றின.
ஊழல் தடுப்புச் சட்ட திருத்த மசோதா
ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி அரசாங்க ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கும் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்பதாகும்.
தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழக மசோதா
இம்மசோதா நிறைவேற்றப்பட்டு, தேசிய அளவில் மிகப்பெரிய விளையாடுப் பல்கலைக்கழகம் மணிப்பூர் மாநிலத்தில் அமைப்பதற்கான ஒப்புதல்களை இரண்டு அவைகளும் வழங்கியிருக்கின்றது.
ஹோமியோபதி மருத்துவச் சட்ட மசோதா
ஹோமியோபதி மருத்துவமுறையில் ஏற்படும் முறைக் கேடுகளை தடுப்பதற்காக மசோதா நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே இருக்கும் ஹோமியபதி மருத்துவமனைகள, கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் மத்திய அரசின் அனுமதியை ஒரு வருடத்திற்குள் பெற வேண்டும் என்று அம்மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவை தவிர வங்கி ஏல மசோதா, ஸ்டேட் பேங்க் மசோதா, ஜிஎஸ்டி மசோதா ஆகியவற்றையும் இந்த மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவேற்றியுள்ளது.