Parliament security breach: நாடாளுமன்ற பாதுகாவலர்களால் மொத்தம் 4 பேர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களில் 2 இளைஞர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே இருந்து கைது செய்யப்பட்டனர்.
ஆங்கிலத்தில் படிக்க: In major security breach, two enter Lok Sabha, open smoke canisters; 4 held
2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு நாளில் ஒரு பெரிய பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது, புதன்கிழமை 2 இளைஞர்கள் மக்களவைக்குள் நுழைந்து மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் டப்பாவைத் திறந்து வீசினர்.
பார்வையாளர்களின் கேலரியில் அமர்ந்திருந்த அந்த 2 இளைஞர்கள் தங்கள் காலணிகளில் இருந்து புகை குபிகளை எடுத்தனர். அவர்கள் மேசைகளில் தாவித் தாவி குதிப்பதை தொலைக்காட்சி காட்சிகள் காட்டியது . மேலும், அவர்கள் அவையின் மையப் பகுதியை நோக்கிச் செல்வது போல இருந்தது. இந்த சம்பவம் குறித்து அவைக்குள் இருந்த உறுப்பினர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அவர்கள் (போராட்டக்காரர்கள்) ‘தன ஷாஹி நஹி சலேகி’ (சர்வாதிகாரம் ஏற்றுக்கொள்ளப்படாது) போன்ற கோஷங்களை எழுப்பினர். அவர்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், லத்தூர் (மகாராஷ்டிரா) பகுதியைச் சேர்ந்த அமோல் என்ற இளைஞரும் ஹிசார் (ஹரியானா) பகுதியைச் சேர்ந்த நீலம் என்ற பெண்ணும், நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே உள்ள டிரான்ஸ்போர்ட் பவனுக்கு அருகில் இருந்து கைது செய்யப்பட்டனர். நிறுத்தப்பட்டனர். மக்களவைக்குள் நுழைந்த இரண்டு இளைஞர்களின் அடையாளம் இன்னும் பாதுகாப்பு அமைப்புகளால் வெளியிடப்படவில்லை.
சபை நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய பா.ஜ.க எம்.பி ராஜேந்திர அகர்வால், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து ஒருவர் குதித்ததையும் அதே நேரத்தில் மற்றொரு நபர் மேசை மீது குதிப்பதையும் பார்த்ததாகக் கூறினார். “அவர்களில் ஒருவர் தனது காலணிகளில் இருந்து புகையைப் பரப்பும் ஒன்றை எடுத்தார். பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களைப் பிடித்தனர். அவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன, எந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதைப் பார்க்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “மக்களவைக்குள் இருந்த நபர்களை நாடாளுமன்ற பாதுகாப்பு பணியாளர்கள் அல்லது சி.ஆர்.பி.எஃப் காவலில் வைத்திருக்க வேண்டும். தற்போதைக்கு, பொது பார்வையாளர் பாஸைப் பெறக்கூடிய நபர்கள் யார் என்பதை நாங்கள் அறிவோம். இந்த பாஸ்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும், அவர்களின் பின்னணி சரிபார்ப்பு செய்யப்படுகிறது. கட்டிடத்தின் உள்ளே பாதுகாப்பு சோதனைகள், ஸ்கேனர்கள் உள்ளன. இருப்பினும், அந்த நபர்கள் புகை குச்சிகளை ஏந்தி, மக்களவைக்குள் நுழைந்துள்ளனர். தற்போது அவர்கள் நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியாளர்களின் பிடியில் உள்ளனர். அதிகாரிகள் பின்னர் எங்களிடம் ஒப்படைத்து புகார் அளிப்பார்கள்.” என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், அந்த இளைஞர்கள் வீசிய டப்பாக்களில் இருந்து மஞ்சள் புகை வெளியேறியதாகக் கூறினார். மேலும் அது ‘விஷமாக’ இருந்திருக்கலாம் என்று கவலை தெரிவித்தார். மேலும், “திடீரென்று சுமார் 20 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பார்வையாளர்களின் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்தனர். அவர்கள் கையில் புகையை வெளியிடும் டப்பாக்களை வைத்திருந்தார்கள். இந்த டப்பாக்கள் மஞ்சள் புகையை வெளியிட்டன. அவர்களில் ஒருவர் சபாநாயகர் நாற்காலியை நோக்கி ஓட முயன்றார். அவர்கள் சில கோஷங்களை எழுப்பினர். புகை விஷமாக இருந்திருக்கலாம். குறிப்பாக 2001-ம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்கப்பட்ட டிசம்பர் 13-ம் தேதி அதே நாளில் நடந்த இந்த சம்பவம் கடுமையான பாதுகாப்பு மீறல்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“