மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்கள் தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேளாண் மசோதாக்கள் தொடர்பாக ஹரியானா, பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் எதிர்ப்புக்கள் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு கோதுமை மற்றும் ஐந்து ரபி பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச விலையை ஆறு சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. குறைந்த பட்ச ஆதாரவு விலையை உயர்த்தி விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) அவசரச் சட்டம் 2020, விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) அவசரச்சட்டம் 2020 ஆகிய 2 வேளாண் மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த 2 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அவையின் விதிகளை மீறி அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் அனைவரும் இந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெரெக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜீவ் சதவ், கே.கே.ரகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நசீர் உசேன் மற்றும் எலமரன் கரீம் ஆகிய 8 எம்.பி.க்களும் அவையில் இருந்து வெளியேற மறுத்த நிலையில், மத்திய அரசு இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களை நீக்காவிட்டால் சபை செயல்பட முடியாது என்று கூறியது.
மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, துணைத் தலைவர் ஹரிவன்ஷுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்தார். இதில் சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும், இதைச் செய்ய 14 நாள் அறிவிப்பு தேவை என்றும் அவர் கூறினார்.
இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில், சதவ், உசேன் மற்றும் போரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். டெரெக் ஓ பிரையன் மற்றும் டோலா சென் ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். சஞ்சய் சிங் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர். கரீம் மற்றும் ராகேஷ் சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து வெங்கையா நாயுடு, “நேற்று நடந்தவற்றால் நான் மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து சமூக இடைவெளி மற்றும் கோவிட் நெறிமுறைகள் மீறப்பட்டன. என்ன நடந்தாலும், இது தர்க்கத்தை மீறியது. இது மாநிலங்களவைக்கு ஒரு மோசமான நாள். துணைத் தலைவர் உடல் ரீதியாக அச்சுறுத்தப்பட்டார். அவரது உடல் நலன் குறித்து நான் கவலைப்பட்டேன். சபையில் அவை நடவடிக்கையைத் தடுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இது சபையின் கௌரவத்தை கெடுக்கிறது. இது பாராளுமன்ற முறையா ? உறுப்பினர்கள் சில இடைநீக்கம்செய்ய நான் பரிந்துரைக்கிறேன். மார்ஷல்களை சரியான நேரத்தில் அழைக்கவில்லை என்றால், என்ன நடந்திருக்கும்? ” என்று கூறினார்.
இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கோதுமை உள்ளிட்ட ஐந்து ரபி பயிர்களுக்கான ஆதரவு விலைகளை உயர்த்தி அறிவித்தது. மக்களவையில் பேசிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “ரபி பருவத்தின் மிகப்பெரிய பயிர் கோதுமை அதனுடைய எம்எஸ்பி (குறைந்தபட்ச ஆதரவு விலை) குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தி ரூ.1,975 வரை உயர்த்தப்பட்டுள்ளது. தவிர, பயறு (மசூர்), தானியம், பார்லி, குங்குமப்பூ மற்றும் கடுகு / ராப்சீட் ஆகியவற்றின் எம்.எஸ்.பி.கள்அதிகரிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ) திங்கள் கிழமை 6 ரபி பருவ பயிர்களின் எம்.எஸ்.பி-களை உயர்த்தி ஒப்புதல் அளித்துள்ளது. இது குளிர்கால பயிர் விதைப்பு நடவடிக்கைகளுக்கு முன்னதாக விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது.