தேர்தலில் குற்றவாளிகள் போட்டியிடுவதை நீதிமன்றம் தடுக்க முடியாது - தீபக் மிஸ்ரா

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக மாறி வருவது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது

குற்றப் பிண்ணனி கொண்டவர்கள் தேர்தலில் பங்கேற்பதற்கு தடை கோரிய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு நீதிமன்றம் இதற்கான தீர்ப்பினை இன்று காலை வெளியிட்டிருக்கிறது.

குற்றப் பிண்ணனி கொண்டவர்கள் தேர்தலில் பங்கேற்பது

அதில் குற்றப் பிண்ணனி கொண்டவர்கள்  தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்பதை பாராளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இந்தியாவில் தற்போதைய சூழலில் நிறைய குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக மாறி வருவது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் மேலும் பேசும் போது “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்கினை முன் கூட்டியே தங்களின் கட்சியினருக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகளாக பங்காற்றும் அரசியல்வாதிகளும் தங்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இது தொடர்பான அறிக்கையினை குறைந்தது மூன்று முறையாவது செய்தித் தாள்களில் பிரசுரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

என்.ஜி.ஓவை நடத்தி வரும் டெல்லியை சேர்ந்த பாஜக தலைவர் அஸ்வினி குமார் உபத்யாய் தொடுத்த வழக்கினை இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப். நரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசுட், மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய அமர்வு விசாரித்தது.

மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதிட்டார். குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாவதற்கு நாட்கள் அதிகம் ஆகிறது. அதனால் தான் குற்றவாளிகள் மக்கள் பிரதிநிதிகளாகி விடுகிறார்கள் என்று கூறினார்.

எதிர் தரப்பில் வாதாடிய கிருஷ்ணன் வேணுகோபால் “குற்றம் சுமத்தப்பட்ட ஒரு காரணத்திற்காக குற்றவாளியா இல்லையா என்று கண்டறிந்து அதன் பின்னர் போட்டியிடுவது என்பது சவாலான காரியம்” என்று வாதிட்டார்.

வேட்பு மனு தாக்கல் செய்பவர் குற்றவாளியாக இருக்கும் பட்சத்தில் அவர் போட்டியிடுவதை அக்கட்சியே தடுத்து நிறுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close