மாநிலங்களவையில் முத்தலாக் சட்ட மசோதா : மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது முத்தலாக் சட்ட மசோதா. கடந்த வாரம் மக்களவையில் பெரும் விவாதத்துடன், இந்த சட்ட மசோதாவிற்கு 245 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 11 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை ஆதரவினைத் தொடர்ந்து, சுமித்ரா மஹாஜன் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது முத்தலாக் சட்டம் என்று கடந்த 27ம் தேதி அறிவித்தார்.
மாநிலங்களவையில் முத்தலாக் சட்ட மசோதா
அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலர் இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும் படிக்க : சபரிமலை விவகாரம் மக்களின் நம்பிக்கை... ஆனால் இஸ்லாமியர்களின் முத்தலாக் சட்ட விரோதமா ? - ஓவைசி கேள்வி
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மாநிலங்களவையில் இன்று தவறாமல் அனைவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 245 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அவையில் பாஜகவினர் 89 ஆகவும், காங்கிரஸார் 62 பேரும், இதர கட்சியினர் 82 பேரும் உள்ளனர்.
ஏற்கனவே காங்கிரஸார், அதிமுக, சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் ஏற்கனவே இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகவே மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஆலோசனையில் ஈடுபட்டு வரும் மோடி
முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷா, அருண் ஜெட்லி, மற்றும் ராஜ் நாத் சிங் ஆகியோருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
சட்ட மசோதாவை தாக்கல் செய்வதில் தாமதம்
மறைந்த வங்க மொழி இயக்குநர் மிருணாள் சென்னிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பின்பு அவை தொடங்கியது. அவை துவங்கியதும், மேகதாது அணை தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர் அதிமுகவினர். மேலும் ரபேல் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள். கூச்சல் மற்றும் குழப்பம் நிலவியாதால் அவையை 2 மணி நேரம் வரை ஒத்தி வைப்பதாக கூறி அறிவித்தார் சபாநாயகர்.