ராஜ்யசபா கூட்டம் வருகிற 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக கூட்டத்திற்கு வந்த கனிமொழியை ரேணுகா சவுத்ரி கட்டித் தழுவி வரவேற்றார்.
கனிமொழியை வாழ்த்திய ரேணுகா சவுத்ரி
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கியது. அண்மையில் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், பாகிஸ்தான் அதிகாரிகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்ததாக குற்றம் சாட்டினார்.
அரசியல் ரீதியாக தங்களை எதிர்ப்பவர்களை தேச விரோதிகளாக காட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாகவும் அது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத் தொடரின் ஆரம்ப நாள் முதல் காங்கிரஸ் கோரி வருகிறது.
மன்மோகன் சிங் குறித்து பேசியதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிப்பதுடன் மன்னிப்பும் கோர வேண்டும் என இன்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாநிலங்களவையை வருகிற டிசம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
முன்னதாக 2ஜி வழக்கில் நேற்று விடுதலை அடைந்த திமுக எம்.பி. கனிமொழி, இன்று மாநிலங்களவை வந்தார். அவைக்கு வெளியே அவரை எதிர்கொண்ட காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும் ஆந்திராவை சேர்ந்தவருமான ரேணுகா சவுத்ரி கட்டித்தழுவி வாழ்த்தினார். கனிமொழியின் வருகையை ஏராளமான டிவி கேமராமேன்கள் ஆர்வத்துடன் பதிவு செய்தனர்.
தமிழகம், கேரளா, லட்சத்தீவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஓகி புயல் குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடத்தப்பட உள்ளது. கேள்வி நேரம் முடிந்ததும், ஒகி புயல் குறித்த விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார், ‘இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியால் அரசியல் ஆக்கப்படாது என நம்புகிறேன். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் இந்த விவாதத்தில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொள்ள வேண்டும்’ என்றார்.