‘உடல்நலம் குன்றியுள்ள என்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனிப்பட்ட முறையில் பார்க்க வந்து, அதை தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது’ என கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
ரபேல் போர் விமானம் கொள்முதல் பேரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தனது நண்பரான அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆதாயம் தேடித்தந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இந்தநிலையில், கணைய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து பேசினார். சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று முதல்வர் மனோகர் பாரிக்கரைச் சந்தித்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மனோகர் பாரிக்கரின் உடல் நிலை குறித்து ராகுல் காந்தி விசாரித்தார்.
பின்னர், கேரளாவில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘ரஃபேல் புதிய ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பாரிக்கர் என்னிடம் தெரிவித்தார்’ என்றார். மேலும், இந்த ஒப்பந்தம் பிரதமர் மோடி – அம்பானி இடையிலான ஒப்பந்தம் எனவும் ராகுல் கூறி இருந்தார்.
இதற்கு மனோகர் பாரிக்கர் கடும் கண்டனம் தெரிவித்து, ராகுலுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து கொள்வது நாகரிக அரசியலை வளர்க்கவே. அதன் அடிப்படையிலேயே நீங்கள் என்னை சந்திக்க வந்ததாக எண்ணினேன். 5 நிமிடம் நடந்த சந்திப்பில், ரபேல் குறித்து நீங்கள் எதையும் குறிப்பிடவில்லை. அது குறித்து விவாதிக்கவில்லை. உடல் நலம் குன்றியுள்ள நிலையிலும் நான் ஏற்றுக் கொண்ட கொள்கையால் உந்தப்பட்டு அது எனக்கு அளிக்கும் புத்துணர்ச்சியும், கோவா மக்களின் அன்புமே என்னை தொடர்ந்து பணியாற்ற ஊக்குவிக்கிறது.
மக்களுக்கு சேவை செய்வதற்காக, வாழ்த்து தெரிவிக்கவே நீங்கள் என்னை சந்திப்பதாக நினைத்தேன். வேறு உள்நோக்கம் இருப்பது பின்னர் தான் தெரியவந்தது. உங்கள் பயணத்தில் பெரிய ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டுள்ளது. உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த கடிதத்தை எழுதி உள்ளேன். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து அதனை தரக்குறைவான அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த வேண்டாம். உங்களின் இந்த செயல் என்னை வேதனையில் ஆழ்த்தியுள்ளது” என்று அந்த கடிதத்தில் மனோகர் பாரிக்கர் குறிப்பிட்டுள்ளார்.