Advertisment

தென்னாப்பிரிக்காவில் இருந்து டெல்லி வழியாக மும்பை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி

Passenger from S Africa lands in Mumbai via Delhi, tests positive: தென்னாப்பிரிக்காவில் இருந்து டெல்லி வழியாக மும்பை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி; ஒமிக்ரான் மாறுபாட்டால் பாதிப்பா என அறிய சோதனைகள் நடைபெற்று வருகிறது

author-image
WebDesk
New Update
தென்னாப்பிரிக்காவில் இருந்து டெல்லி வழியாக மும்பை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி

நவம்பர் 24 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து டெல்லி வழியாக வந்த மும்பையில் உள்ள டோம்பிவ்லியில் வசிக்கும் 32 வயதான ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை சுகாதார அதிகாரிகள் இன்னும் அறியவில்லை.

Advertisment

“பயணி ஒருவர் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் இருந்து துபாய் வழியாக டெல்லிக்கு வந்தார். அவர் டெல்லியில் கொரோனா பரிசோதனைக்கு மாதிரியைக் கொடுத்தபின், மும்பைக்கு இணைக்கும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டார். மும்பை வந்தடைந்தபோது அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அவருக்கு அறிகுறியற்ற கொரோனா உள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பின்னர், கார்ப்பரேஷன் அவரை ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தியது, ”என்று கல்யாண் டோம்பிவ்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் (KDMC) தலைமை மருத்துவ அதிகாரி பிரதிபா பன்பாட்டீல் கூறினார்.

KDMC சுகாதார அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகளை எச்சரித்துள்ளதாகவும், அந்த நபரின் சக பயணிகளைக் கண்டறியும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா கூடுதல் தலைமைச் செயலர் (சுகாதாரம்) டாக்டர் பிரதீப் வியாஸ், கூறுகையில், “அந்த பயணி ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய, மரபணு வரிசைப்படுத்தலுக்கு அவரது மாதிரிகளை அனுப்பியுள்ளோம்,” என்றார்.

சர்வதேச பயணிகளுக்கான மத்திய அரசின் நவம்பர் 11 ஆம் தேதியிட்ட வழிகாட்டுதல்களின்படி, விமான பயணிகள் தரையிறங்கியவுடன் RT-PCR சோதனைகளுக்கான மாதிரிகளை சமர்ப்பிக்கப்பட வேண்டும், அதன் பிறகு பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் ஏழு நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலைப் பின்பற்ற வேண்டும், எட்டாம் நாளில் கட்டாய மறுபரிசோதனை செய்ய வேண்டும்.

ஓமிக்ரான் மாறுபாடு குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட "பாதிக்கப்பட்ட நாடுகளில்" இருந்து கடந்த 15 நாட்களில் நகரத்திற்கு வந்த 466 பயணிகளை பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC), RT-PCR சோதனைகளுக்கான மாதிரிகளை சேகரிக்க தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளது. மும்பைக்கு வந்த 466 பயணிகளில் 97 பேர் நகரவாசிகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து பயணிகளையும் அவர்களின் உடல்நலம் குறித்து தெரிந்துகொள்ள கார்ப்பரேஷன் தனித்தனியாக தொடர்பு கொள்கிறது.

மும்பையில் வசிக்கும் பயணிகளுக்கு எந்த அறிகுறியும் இல்லை. அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திங்களன்று அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனைகளை நடத்துவோம்” என்று BMC கூடுதல் ஆணையர் சுரேஷ் ககானி கூறினார்.

பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் வரும் அல்லது பாதிக்கப்பட்ட நாடுகள் வழியாக வரும், பயணிகளுக்கு ஏழு நாள் நிறுவன தனிமைப்படுத்தலை மாநில அரசு கட்டாயமாக்க வாய்ப்புள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது. உள்நாட்டு பயணிகளுக்கு, மாநிலத்திற்குள் நுழைவதற்கு RT-PCR சோதனையில் கொரோனா இல்லை என்ற சான்றை கட்டாயமாக கொண்டு வர வேண்டும் என்ற விதியை அரசாங்கம் மீண்டும் கொண்டு வர வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே, சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப், மூத்த அரசு அதிகாரிகள், மாநில கோவிட் பணிக்குழு உறுப்பினர்கள், மண்டல ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய கோவிட்-19 ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு பரிசோதனைகளை நடத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் தாக்கரே அறிவுறுத்தினார், மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தல்களுக்கு காத்திருக்காமல் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார் என்று முதல்வர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிற இடங்களில் தரையிறங்கி, உள்நாட்டு விமானங்கள், சாலைப்போக்குவரத்து மற்றும் இரயில்கள் மூலம் மகாராஷ்டிராவிற்குள் வரும் சர்வதேச பயணிகளை "போர்க்கால அடிப்படையில்" கண்காணிக்கும்படி முதல்வர் தாக்கரே அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில், தென்னாப்பிரிக்கா மற்றும் பிற தென்னாப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் அல்லது அந்த நாடுகள் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கான நிறுவன தனிமைப்படுத்தல் பற்றி விவாதிக்கப்பட்டது. "இந்தப் பயணிகளுக்கு ஏழு நாள் கட்டாய நிறுவன தனிமைப்படுத்தல் இருக்க வேண்டும் என்பது பரிந்துரை" என்று அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.

சனிக்கிழமையன்று, தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் அல்லது அந்த நாடுகள் வழியாக வரும் பயணிகளுக்கு 14 நாள் நிறுவன தனிமைப்படுத்தலை கட்டாயமாக்குவதற்கான திட்டத்தை BMC மாநில அரசாங்கத்திற்கு அனுப்பியது.

இந்த கட்டுப்பாடுகள் குறித்த உத்தரவை அடுத்த ஓரிரு நாட்களில் மாநில அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஒமிக்ரான் மாறுபாட்டின் சவால் கவலைக்குரியது. எந்த சூழ்நிலையிலும் நோய்த்தொற்றின் ஆபத்து (புதிய மாறுபாடு) அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நோய்த்தொற்று அதிகரித்தபின், ஊரடங்கு போன்ற ஒரு செயல்முறை சரிவராது. எனவே, அதைத் தவிர்க்க, வழக்கமாக முகக்கவசம் அணிவது, தேவையற்ற கூட்டத்தைத் தவிர்ப்பது, பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும், ”என்று முதல்வர் கூறினார், மேலும் இவற்றை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் கிடைப்பதை சரிபார்க்கவும், மருத்துவமனைகளில் தீ தடுப்பு தணிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் தாக்கரே அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். மேலும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.

சந்திராபூர், பால்கர், நாசிக், அகமதுநகர், கட்சிரோலி, ஜல்னா, புல்தானா, சோலாப்பூர் மாவட்டங்கள் மற்றும் சில மாவட்டங்களில் 30% க்கும் குறைவான தடுப்பூசி கவரேஜ் உள்ளது, எனவே இந்த மாவட்டங்களில், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்குமாறு முதல்வர் தாக்கரே மாவட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

திங்கள்கிழமை, முதல்வர் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களின் சாதி சரிபார்ப்பு முடிவைத் தவிர, புதிய கொரோனா மாறுபாடு மற்றும் தடுப்பூசி பிரச்சினை குறித்து அமைச்சரவை விவாதிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம்) டாக்டர் பிரதீப் வியாஸ் கூறுகையில், ‘பரிசோதனை-கண்காணித்தல்-சிகிச்சை-தடுப்பூசி’ கொள்கையை அரசாங்கம் மேம்படுத்தும். தற்போது மாநில அளவில் தினசரி சராசரியாக 6.5 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இது 11 லட்சத்துக்கும் மேலாக அதிகரிக்கப்படும் என்றார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் பயணிகளின் மரபணு வரிசைப்படுத்தல் செயல்முறை செய்யப்படும் என்றும் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் முன்பு அறிவித்திருந்தார்.

இப்போது, சோதனை நெறிமுறைகளை நீட்டித்து, கொரோனா உறுதி செய்யப்பட்ட அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் மரபணு வரிசைப்படுத்தல் செயல்முறையை செய்ய மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

"சில சிகிச்சையில் உள்ள கொரோனா பாதிப்புகள் காரணமாக, மரபணு வரிசைமுறையை இயக்க போதுமான மாதிரிகள் கிடைக்கவில்லை, எனவே கொரோனா உறுதி செய்யப்பட்ட அனைத்து சர்வதேச பயணிகளிடமும் மரபணு சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம்" என்று ககானி கூறினார்.

மாநிலத்தில் தீடீரென தொற்று பாதிப்பு அதிகரித்தால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, ​​பிரத்யேக கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள 17,380 படுக்கைகளில், 1,100 மட்டுமே நிரம்பியுள்ளன.

சாத்தியமான மூன்றாவது அலையின் போது நோயாளிகளைச் சமாளிக்க, மாநிலம் அதன் ஆக்ஸிஜன் உற்பத்தி திறனை 1,200MT இலிருந்து 2,500MT ஆக உயர்த்தியுள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் ஆணையர் என் ராமஸ்வாமி, அடுத்த இரண்டு மாதங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தியில் 3,838 மெட்ரிக் டன்னை எட்டும் திட்டம் உள்ளது என்றார்.

“மாவட்ட வாரியாக, 513 ஆக்ஸிஜன் உற்பத்திக்கான PSA ஆலைகளை நிறுவியுள்ளோம். 50% க்கும் மேற்பட்ட நிறுவுதல் பணிகள் நிறைவடைந்துள்ளன, மற்றவற்றில் பணிகள் நடந்து வருகிறது” என்று என் ராமஸ்வாமி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Corona Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment