Patra Chawl redevelopment case: ED arrests Shiv Sena MP Sanjay Raut: சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்க இயக்குனரகம் (ED) ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தது. திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார், அங்கு அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரும்.
அமலாக்கத்துறை ஞாயிற்றுக்கிழமை சஞ்சய் ராவத்தின் பாண்டுப் இல்லத்தில் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தியது, பின்னர் மும்பையின் வடக்கு புறநகரில் ஒரு சால் திட்டத்தின் மறுவடிவமைப்புடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்காக அவரை கைது செய்தது.
இதையும் படியுங்கள்: லுலு மால் முதல் கேரளாவின் மிகப்பெரிய தொழிலதிபர் வரை; யார் இந்த யூசுஃபலி?
ஜூலை 1 ஆம் தேதி அமலாக்கத்துறை நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சய் ராவத்திடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக கேள்வி எழுப்பியது, ஜூலை 20 ஆம் தேதி அவர் மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பியது. ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் சஞ்சய் ராவத், நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரை மேற்கோள் காட்டி சம்மனுக்கு பதிலளிக்கவில்லை.
அமலாக்கத்துறை புலனாய்வாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சஞ்சய் ராவத்தின் வீட்டிற்கு வந்து, ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக அவரது வீட்டு உறுப்பினர்களை விசாரித்த பிறகு, மாலை 4.45 மணிக்கு பல்லார்ட் பியரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர். சஞ்சய் ராவத்க்கு ஆதரவாக கணிசமான எண்ணிக்கையிலான சிவசேனா தொண்டர்கள் அவரின் இல்லத்திற்கு வெளியே கூடினர்.
ஹவுசிங் டெவலப்மென்ட் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (HDIL) இன் துணை நிறுவனமான குரு ஆஷிஷ் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் மூலம் பத்ரா சால்லை மறுவடிவமைப்பு செய்ததில் முறைகேடுகள் தொடர்பான வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 இன் மீறல்களை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. முன்னதாக சஞ்சய் ராவத்தின் நெருங்கிய கூட்டாளியான பிரவின் ராவத்தை கைது செய்ததுடன், சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்தின் சொத்துகளையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
குரு ஆஷிஷ் கன்ஸ்ட்ரக்ஷன் மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையத்துடன் (MHADA) முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது பத்ரா சாலின் 672 குடியிருப்பாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்குவதற்கும், MHADA க்கு பிளாட்களை உருவாக்குவதற்கும், மீதமுள்ள பகுதியை தனியார் டெவலப்பர்களுக்கு விற்பனை செய்வதற்கும் உறுதியளித்தது.
ஆனால், பிரவின் ராவத் மற்றும் குரு ஆஷிஷ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸின் மற்ற இயக்குநர்கள் MHADA-ஐ தவறாக வழிநடத்தி, 672 குடியிருப்பாளர்களுக்கு மறுவாழ்வுப் பகுதி அல்லது MHADA இன் பகுதியைக் கட்டாமல், 901.79 கோடி ரூபாய் வசூலித்து, ஒன்பது தனியார் டெவலப்பர்களுக்கு ஃப்ளோர் ஸ்பேஸ் இன்டெக்ஸை (FSI) விற்றுவிட்டனர், என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
HDIL நிறுவனத்திடம் இருந்து பிரவின் ராவத் ரூ. 100 கோடி பெற்றதாகவும், அதை சஞ்சய் ராவத் குடும்பத்தினர் உட்பட அவரது நெருங்கிய கூட்டாளிகள், குடும்ப உறுப்பினர், வணிக நிறுவனங்களின் பல்வேறு கணக்குகளுக்கு திருப்பி அனுப்பியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
அமலாக்கத்துறை விசாரிக்கும் எந்த நிறுவனங்களுடனும் தனக்கு தொடர்பு இல்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். அனைத்து குற்றச்சாட்டுகளையும் சஞ்சய் ராவத் மறுத்துள்ளார், மேலும் அவருக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று குற்றம் சாட்டினார்.
“இது ஒரு போலி விசாரணை. மக்களை மிரட்டி தாக்கி எனக்கு எதிராக போலியான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இது மகாராஷ்டிரா மற்றும் சிவசேனாவை பலவீனப்படுத்தும் சதியின் ஒரு பகுதியாகும். ஆனால் மகாராஷ்டிராவும், சிவசேனாவும் ஒருபோதும் பலவீனமடையாது. சஞ்சய் ராவத் ஒருபோதும் வளைந்து கொடுக்க மாட்டார், சிவசேனாவை விட்டு விலகவும் மாட்டார்” என்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டபோது செய்தியாளர்களிடம் சஞ்சய் ராவத் கூறினார்.
“என் மீது போடப்பட்ட ஒரு போலி வழக்கு. இது எனது குரலை அடக்கும் முயற்சியின் ஒரு பகுதி. அவர்கள் என்னை கைது செய்யப் போகிறார்கள், நான் கைது செய்யப்படுவேன், ”என்று சஞ்சய் ராவத் கூறினார்.
சஞ்சய் ராவத்தின் சகோதரரும் அதே வீட்டில் தங்கியிருப்பவருமான சிவசேனா எம்.எல்.ஏ சுனில் ராவத், அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சோதனை வாரண்ட் இருப்பதாகவும், குடும்பம் ஏற்கனவே அமலாக்கத்துறையிடம் சமர்ப்பித்த ஆவணங்களை அவர்கள் சேகரித்ததாகவும் கூறினார்.
“அவர்கள் மைத்ரி பங்களாவை தேடுவதற்கான வாரண்ட் வைத்திருந்தார்கள், மேலும் மூன்று தளங்களையும் சோதனை செய்தனர். நாங்கள் முன்பு அமலாக்கத்துறையிடம் சமர்ப்பித்த ஆவணங்களையும், வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்த ஆவணங்களையும், சஞ்சய் ராவத் தேர்தல் பிரமாணப் பத்திரத்துடன் தாக்கல் செய்த ஆவணங்களையும் அவர்கள் சேகரித்தனர். பத்ரா சால் தொடர்பான ஒரு ஆவணத்தையும் அவர்களால் எடுக்க முடியவில்லை. இது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை தனிமைப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட போலி விசாரணை” என்று சுனில் ராவத் கூறினார்.
மாலையில், சஞ்சய் ராவத்தின் வீட்டில் இருந்து கணக்கில் வராத 11.5 லட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டதாக அமலாக்கத்துறையின் வட்டாரங்கள் கூறின. மறுபுறம், பத்ரா சால் வழக்கில் அமலாக்கத்துறை சாட்சியான ஸ்வப்னா பட்கரை மிரட்டியதாக சஞ்சய் ராவத் மீது மும்பை காவல்துறை ஞாயிற்றுக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. சஞ்சய் ராவத் மற்றும் ஸ்வப்னா பட்கர் இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடலின் ஆடியோ பதிவின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வகோலா காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 504, 504 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சஞ்சய் ராவத் தன்னை மிரட்ட முயன்றதாக ஸ்வப்னா பட்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அமலாக்கத்துறையின் நடவடிக்கை கட்சியை அழிக்கும் “சதியின்” ஒரு பகுதியாகும் என்று கூறினார். உத்தவ் தாக்கரே தனது இல்லமான மாதேஸ்ரீயில் தானே மாவட்டத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
“அமலாக்கத்துறை அதிகாரிகள் சஞ்சய் ராவத்தின் வீட்டில் இருக்கிறார்கள். அவர் கைது செய்யப்படலாம். என்ன ஒரு சதி இது? சிவசேனா இந்துக்களுக்கும் மராத்தி மக்களுக்கும் பலத்தை அளிக்கிறது, எனவே கட்சியை முடிக்க சதி நடக்கிறது, ”என்று உத்தவ் தாக்கரே கூறினார். மேலும், சிவசேனா மூலம் அரசியல் ரீதியாக வளர்ந்தவர்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்டதாகவும் உத்தவ் தாக்கரே கூறினார்.
மகாராஷ்டிர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார், ஏன் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை மீண்டும் மீண்டும் விசாரிக்க விரும்புகிறது என்று கேள்வி எழுப்பினார். “வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ ஆகியவற்றிலிருந்து பலருக்கு நோட்டீஸ் வந்தது. ஆனால், அமலாக்கத்துறை ஏன் அவரை மீண்டும் மீண்டும் விசாரிக்க விரும்புகிறது என்பதை சஞ்சய் ராவத் மட்டுமே சொல்ல முடியும், ”என்று மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித் பவார் செய்தியாளர்களிடம் கூறினார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், சஞ்சய் ராவத்தின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை ஜனநாயகத்தின் “வருந்தத்தக்க படத்தை” முன்வைத்தது, மேலும் பா.ஜ.க அனைத்து எதிர்க்கட்சிகளையும் “அடக்க” விரும்புகிறது என்று குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்தார்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அமலாக்கத்துறை தனக்கு விதிக்கப்பட்ட வேலையைச் செய்கிறது என்றும், அரசியல் அழுத்தத்தின் கீழ் செயல்படவில்லை என்றும் கூறினார்.
“விசாரணை நடந்து வருகிறது. அவர் (சஞ்சய் ராவத்) எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், அவர் ஏன் பயப்படுகிறார், அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணைகளை நடத்தியது. அமலாக்கத்துறை மத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி செயல்படுகிறது என்றால், உச்ச நீதிமன்றம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்… அமலாக்கத்துறை தனது வேலையைச் செய்கிறது,” என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
முன்னதாக சஞ்சய் ராவத்தை விமர்சித்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேவை காங்கிரஸ்-என்.சி.பி.யின் கைகளுக்குத் தள்ளியதற்காக அவர் மீது குற்றம் சாட்டினர், மேலும், சஞ்சய் ராவத் செய்ததற்கான விளைவுகளை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
எம்.எல்.ஏ சஞ்சய் ஷிர்சத் கூறுகையில், “அவர் (சஞ்சய் ராவத்) வெகுஜன தலைவர் அல்ல. அவர் வெறும் பேச்சாளர் மட்டுமே. இந்த (அமலாக்கத்துறையின்) நடவடிக்கையால் சிவ சைனியர்கள் அவருக்கு ஆதரவாக பெரிய அளவில் எழும்ப வாய்ப்பில்லை. இந்த நாடு சட்டத்தின் ஆட்சியில் இயங்குகிறது. அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றால், அவர் விடுவிக்கப்படுவார்,” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil