ஜனசேனா கட்சியின் 12-ம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நம் நாட்டில் பல மொழிகள் இருப்பது நல்லது. தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால், தமிழ் படங்களை இந்தியில் 'டப்' செய்து வெளியிட அனுமதிக்கின்றனர். சமஸ்கிருதத்தை சிலர் ஏன் விமர்சிக்கின்றனர் என்றே என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் தேவை. ஆனால், இந்தி தேவையில்லையா? எனக் கூறி இருந்தார்.
தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தி திணிப்பு விவகாரம் குறித்த பவன் கல்யாணின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இதற்கு, நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பதிவில் அவரது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:’ஹிந்தியை எங்கள் மீது திணிக்காதீர்கள்’ என்பது மற்ற மொழியை வெறுப்பதற்காக அல்ல. அது எங்களது தாய்மொழியை பெருமையுடன் பாதுகாப்பதாகும். தயவுசெய்து இதை யாராவது பவன் கல்யாணுக்கு தெரிவியுங்கள் எனக் கூறியுள்ளார்.
பவன் கல்யாணின் பேச்சுக்கு கருத்து தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டை விமர்சித்த பவன் கல்யாணின் பழைய பதிவுகளை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். மொழித் தடைகளைத் தாண்டி திரைப்படங்களைப் பார்க்க தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கிறது என்றும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்கு முன்பு பவன் கல்யாண் இந்தி திணிப்பு எதிராக பேசிய கருத்துகளையும், பாஜக கூட்டணியில் துணை முதல்வரான பிறகு தற்போது பேசியதையும் ஒப்பிட்டு கனிமொழி விமர்சித்துள்ளார்.