தேர்தெடுக்கப்பட்டப் பிறகு நிச்சயம் பிரதமர் பதவி ஏற்பேன் என்று ராகுல் காந்தி கூறிய கருத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி எதிர் கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெங்களூரை அடுத்த பங்கார்பேட்டையில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது, பேசிய அவர், ‘அடுத்த 5 ஆண்டுகளில் கர்நாடகாவுக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் இது. பல மாநிலங்களை காங்கிரஸ் கட்சி சீரழித்து வந்தது. காங்கிரஸ் கலாச்சாரம், வகுப்புவாதம், ஜாதி, குற்றங்கள், ஊழல் மற்றும் ஒப்பந்த முறை ஆகிய 6 விதமான நோய்களால் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 6 நோய்களும் கர்நாடகாவின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி வருகின்றன’ என்று கூறினார்.
பின்னர் தேர்வு செய்யப்பட்ட பிறகு நிச்சயமாகப் பிரதமர் பதிவியில் அமர்வேன் என்று சமீபத்தில் ராகுல் காந்தி கூறியதற்கு எதிர்ப்பு கருத்தை பிரதமர் மோடி தெரிவித்தார். அப்போது ‘ஒருவரால் எப்படி தன்னைத் தானே பிரதமராக அறிவித்துக் கொள்ள முடியும்? அரசியலில் ராகுலுக்கு இன்னும் முதிர்ச்சி ஏற்படவில்லை. அவரை, மக்கள் ஒருபோதும் பிரதமராக ஏற்க மாட்டார்கள்.’ என்று கூறினார்.