முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இதனிடையே, பேரறிவாளன் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஒரு பயங்கரவாதி பயங்கரவாதி தான், எனவே பயங்கரவாதியாக கருதப்பட வேண்டும்," என்று தகவல் தொடர்பு துறை தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறினார்.
ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த காலங்களில் அறிக்கைகளை வெளியிட்டதால், இப்போது கட்சியின் எதிர்வினை சுவாரஸ்யமானதாக பார்க்கப்படுகிறது.
ராஜீவ் கொலையாளிகள் மீது சோனியா மற்றும் அவரது குழந்தைகள் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோருக்கு எந்தத் தீய எண்ணமும் இல்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக கட்சி கூறியது.
பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், இந்த உத்தரவை வரவேற்று, "தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு தெளிவுபடுத்தியுள்ளது என்று கூறினார்.
பேரறிவாளன் விடுதலைக்காக மறைந்த ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளை நினைவுகூர்ந்து எதிர்க்கட்சியான அதிமுகவும் இந்த உத்தரவை வரவேற்றுள்ளது.
இதனிடையே’ பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காங்கிரஸ் இன்று போராட்டம் நடத்துகிறது. வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு முக்கிய இடங்களில் இன்று அறப்போராட்டம் நடத்த கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“