கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தி, புதுச்சேரி பாகூரில் உள்ள பெரிய கோவில் அருகே 2 நாட்களுக்குப் புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வுக்குச் சங்கத்தின் பாகூர் கொம்யூன் ஒருங்கிணைப்பாளர் இரா. பக்தவாச்சலம் தலைமை தாங்கினார். பி. கல்கி முன்னிலை வகிக்க, நா. சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். கீழடி தாய்மடி என்ற பெயரில் அமைக்கப்பட்டிருந்த இந்த புகைப்படக் கண்காட்சியில், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட நுட்பமான பொருட்களின் கருத்துகளை விளக்கும் வண்ணப் படங்கள் 500 சதுர அடி பரப்பளவில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தக் கண்காட்சியை, முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் மற்றும் பாடகர் உமா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பாகூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும், பணிநிறைவு பெற்ற தமிழ் ஆசிரியர் சீ. ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் மு. கந்தசாமி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர் களப்பிரான், கீழடி அகழாய்வு குறித்து விளக்கமான சிறப்புரை நிகழ்த்தினார். முன்னதாக, கலைமாமணி விருது பெற்ற சிலம்பாட்டக் கலைஞர் செல்வம் அவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சியும், பாகூர் நாதஸ்வரக் கலைஞர் பழனிசாமி குழுவினரின் நாதஸ்வரக் கச்சேரியும் நடைபெற்றது. நிகழ்வின் நிறைவில், இரா. ஆனந்தராமன் நன்றி கூறினார்.
இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பாகூர் கொம்யூன் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களான கி. பெருமாள், செந்தமிழ்செல்வன், து. வேலாயுதம், இரா. கலைச்செல்வன், ஆ. பக்கிரி, பா. ஹரிராமன் ஆகியோர் செய்திருந்தனர். இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய 2 நாட்களுக்குப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.