‘வாக்காளர்களின் உரிமையைப் பறிக்க சதி’: எஸ்.ஐ.ஆர்-க்கு கடும் எதிர்ப்பு; தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கும் பினராயி - ஸ்டாலின்

நவம்பர் 2 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எஸ்.ஐ.ஆர். மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்க பா.ஜ.க சதி செய்வதாக குற்றம் சாட்டினார்.

நவம்பர் 2 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எஸ்.ஐ.ஆர். மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்க பா.ஜ.க சதி செய்வதாக குற்றம் சாட்டினார்.

author-image
WebDesk
New Update
Pinarayi MK Stalin 2

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் Photograph: (Source: File Photo)

Arun Janardhanan

இந்தியாவில் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மேற்கொள்வதற்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் (இ.சி.ஐ) வெளியிட்ட ஒரு நாள் கழித்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்த முடிவில் இருந்து தேர்தல் ஆணையம் விலக வேண்டும் என்றும், இந்த முடிவு அந்த அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதிக்கிறது என்றும் செவ்வாய்க்கிழமை கூறினார். “தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்கள் மத்தியில் ஆளும் கட்சியின் கைப்பாவைகளாக மாற அனுமதிக்கக் கூடாது” என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

மறுபுறம், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எஸ்.ஐ.ஆர் செயல்முறை மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்களின் உரிமையைப் பறிக்க பா.ஜ.க சதி செய்வதாகக் குற்றம் சாட்டியதுடன், இது குறித்துப் பேச நவம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பினராயி விஜயனின் கண்டனம்

இந்த முடிவு ஜனநாயகச் செயல்முறைக்கு ஒரு சவால் என்று பினராயி விஜயன் கூறினார். மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ்.ஐ.ஆர்-ஐ ஒத்திவைக்கக் கோரிய பிறகும், கேரளாவில் அது குறித்த தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு, அந்த அமைப்பின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பீகாரில் எஸ்.ஐ.ஆர்-ன் அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அதே செயல்முறையை மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தும் நடவடிக்கையைச் சாதாரணமாகப் பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Advertisment
Advertisements

“நீண்ட காலத் தயாரிப்பும் ஆலோசனையும் தேவைப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, மக்களின் விருப்பத்தைப் பலவீனப்படுத்தும் நோக்குடன் அவசரமாக மேற்கொள்ளப்படுவது தெளிவாகிறது. இந்த அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் இத்தகைய முடிவுகளில் இருந்து ஆணையம் விலக வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த மாதம், கேரளத் தலைமைத் தேர்தல் அதிகாரி, உள்ளாட்சித் தேர்தல்களைக் காரணம் காட்டி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த பிறகு, எஸ்.ஐ.ஆர் செயல்முறையை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையத்தை  வலியுறுத்தியிருந்தார்.

மேலும், கடந்த மாதம் கேரள மாநிலச் சட்டமன்றம் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த எஸ்.ஐ.ஆர் செயல்முறை தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) மறைமுகமாகச் செயல்படுத்தும் நோக்கம் கொண்டது என்ற கடுமையான கவலையை இது எழுப்பியது.

மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள்

மாமல்லபுரத்தில் நடைபெற்ற 'எனது வாக்குச்சாவடி - வெற்றிச் சாவடி' பயிற்சித் திட்டத்தில் கட்சித் தொண்டர்களிடையே பேசிய மு.க. ஸ்டாலின், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் "வாக்காளர்களை நீக்குதல் மூலம் வெற்றிபெற" முயற்சிப்பதாகவும், உழைக்கும் வர்க்கத்தினர், பட்டியல் சாதியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களை இலக்காகக் கொண்டு வாக்காளர்களை நீக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

“மக்களை எதிர்கொள்ளும் தைரியம் அவர்களுக்கு இல்லை. எங்களுடன் நிற்பவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பதுதான் அவர்களின் கணக்கு. ஆனால், தமிழ்நாடு இதை அனுமதிக்காது” என்று அவர் எச்சரித்தார். இதே செயல்முறையின் மூலம் பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் உரிமையைத் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே பறித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வரவிருக்கும் தேர்தலைத் “தமிழ்நாட்டின் சுயமரியாதை மற்றும் தனித்துவத்தைப் பாதுகாக்கும் போராட்டம்” என்று அழைத்த ஸ்டாலின், மாநிலத்தின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார அமைப்பின் மீது "ஆக்கிரமிப்பு" நடப்பதாக எச்சரித்தார்.

“இந்தி, சமஸ்கிருதம், ஜிஎஸ்டி மற்றும் ஆளுநர் பெயரால் அவர்கள் நமக்குச் சிக்கலைக் கொடுக்கிறார்கள். அவர்களைத் தோற்கடிக்கும் பலம் நம்மிடம் மட்டுமே உள்ளது. ஆர்எஸ்எஸ்-சின் சதித்திட்டங்கள் தமிழ்நாட்டில் பலிக்காது” என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார்.

இதற்கிடையே, எஸ்.ஐ.ஆர் செயல்முறை குறித்து விவாதிக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தை, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னையில் புதன்கிழமை அன்று அழைத்துள்ளார்.

Mk Stalin Pinarayi Vijayan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: