சபரிமலை கோயில் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த கேரள மாநிலம் கடமைப்பட்டுள்ளதாகவும், மாதவிடாய் வயது பெண்கள் கோயிலுக்கு வருவதைத் தடுக்க எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர முடியாது என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை கூறியுள்ளார்.
சபரிமலை கோயில் விவகாரத்தில் செப்டம்பர் 28, 2018 அன்று உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவுக்கு எதிராக மறு ஆய்வு மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு சில நாட்களுக்கு முன்னால் பினராயி விஜயனின் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.
கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான யு.டி.எஃப் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன், “சபரிமலை பெண்கள் நுழைவு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடையது. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மாநில அரசு கடமைப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.
கேரள மாநில அரசுக்கு கிடைத்த சட்டக் கருத்துப்படி, சபரிமலை தீர்ப்பைத் தவிர்ப்பதற்கு எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர முடியாது என்று பினராயி விஜயன் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர்க்க சட்டத்தைக் கொண்டுவருவது பற்றி பேசுபவர்கள் “பக்தர்களை ஏமாற்றுகிறார்கள்” என்று விஜயன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
கேரள முதல்வர் பினராயி தனது அரசு எந்தவொரு பெண்ணையும் சுவாமி அய்யப்பன் கோயிலுக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தவில்லை என்றும் கோயிலுக்கு செல்வதா வேண்டாமா என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜல்லிக்கட்டு அல்லது காளை வண்டி பந்தயம் தொடர்பான தீர்ப்பைப் போல இது இல்லை என்றும் பினராயி விஜயன் கூறினார்.
உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பின் மூலம், சபரிமலையில் சுவாமி அய்யப்பன் சன்னதிக்குள் அனைத்து வயது பெண்களையும் நுழைய வழி வகுத்தது. அதில், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட மாதவிடாய் வயதுப் பெண்கள் அய்யப்பன் சன்னதியில் வழிபடுவதற்கு இருந்த தடையை நீக்கியது.
இந்த தீர்ப்பு கேரளாவில் பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கு வழி வகுத்தது. எதிர்க்கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் போராட்டக்காரர்களுக்குப் பின்னால் நின்றது.
ஐயப்பன் கோயிலில் மூன்று மாத கால வருடாந்திர யாத்திரைக்காக நவம்பர் 16 முதல் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளது.