Pinarayi vijayan's displeased reply in a press meet : பினராயி விஜயன் கொரோனா தொற்று ஆரம்பமான காலம் முதல் தினமும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாலையில் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். நேற்றைய நிகழ்விலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து 45 நிமிடங்கள் உரையாடினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். எப்போதும் ,எந்தவிதமான கேள்விகள் வந்த போதிலும் அசராமல் பதில் சொல்லி, பிரச்சனையின் சாராம்சத்தை விளக்குவதில் பினராயிக்கு நிகர் யாருமில்லை என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பு அவ்வாறு அமைந்திருக்கவில்லை.
மேலும் படிக்க :ஒரு நாள் ஒரு லிஃப்ட்ல ஒரு சராசரி மனுசனும் சிலந்தி மனுசனும் சந்திச்சா?
தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக நேற்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் முதன்மை செயலாளர் சிவசங்கரனை என்.ஐ.ஏ அதிகாரிகள் 15 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசுக்கு ஏதேனும் ஆதங்கம் உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ”அதற்கு விசாரணை அதன் போக்கில் போகட்டும். அதனால் எங்களுக்கு எந்த ஆதங்கமும் இல்லை. என்.ஐ.ஏ தான் இந்த விவகாரத்தில் முக்கிய நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
பணி நியமனம் தவிர்த்து தங்க கடத்தலிலும் சிவசங்கரன் ஈடுபட்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்ட போது இது மிகவும் அபத்தமான கேள்வி. விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்த கேள்விக்கான பதில் மிகவும் காட்டமான முறையில் வெளியானது.
வருகின்ற சட்டசபை தேர்தலை கணக்கில் கொண்டு இடதுசாரிகளுக்கும் பாஜகவினருக்கும் இடையே ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கிறது என காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார் அது குறித்து? என்ற கேட்ட போது பினராய் விஜயன் அமைதியாக இருந்தார். கேள்வி முதல்வருக்கு கேட்கவில்லையா என்று நிருபர் மீண்டும் கேள்வி எழுப்ப அந்த இடமே பதட்டமானது. 16 நொடிகள் கழித்து இந்த கேள்வி பதில் சொல்லவே தகுதி அற்றது” என்று கூறினார் விஜயன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil