தமிழக பா.ஜ.கவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி டெல்லி தலைமைக்கு வந்தன. தமிழக பா.ஜ.கவின் பொறுப்பாளரான மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், மாநில பா.ஜ.கவின் மையக் குழு உறுப்பினர்களிடம் உட்கட்சி பூசல் மற்றும் மாநில அளவில் உள்ள பிற பிரச்சினைகள் குறித்து அறிக்கை கோரினார்.
"தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய முன்னேற்றங்கள், குறிப்பாக அண்ணாமலை மற்றும் தமிழிசை ஆதரவாளர்களுக்கு இடையேயான உட்கட்சிப் பூசல்களால் பாஜக மேலிடத்தினர் வருத்தமடைந்துள்ளனர். பியூஷ் கோயலின் அலுவலகம், முன்னாள் மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க எம்எல்ஏ வானதி சீனிவாசன் போன்ற தமிழ் தேசியக் குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் அறிக்கை கேட்டது, ”என்று பாஜக மாநில அளவிலான செயல்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அண்ணாமலையின் செயல்பாடுகள், கட்சி நிர்வாகிகளுடனான அவரது ஒருங்கிணைப்பு மற்றும் சமீபத்திய தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பற்றிய விவரங்களை பியூஷ் கோயல் கேட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, கட்சி நிர்வாகிகளில் ஒரு பகுதியினர், அண்ணாமலை தான் முடிவுகளுக்கு காரணம் என குற்றம் சாட்டினர். அதிமுகவுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்திருந்தால் பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என தமிழிசை கூறியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. "குற்ற வரலாற்றைக் கொண்டவர்களுக்கு" வழங்கப்பட்ட பொறுப்புகளையும் அவர் கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலை அமைதியாக இருந்தபோதும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தமிழிசை ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களில் இழுபறியை மேற்கோள்காட்டி, அண்ணாமலை கட்சி மீது கூடுதல் கட்டுப்பாட்டை பெற முயன்றதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“பல கட்சி நிர்வாகிகள் தம்மைக் கவனிக்காதது குறித்து அண்ணாமலை அதிருப்தி அடைந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாகச் செயல்படுவதை உறுதிசெய்ய, கட்சியின் கட்டுப்பாட்டை தனக்கு முழுமையாக வழங்குமாறு டெல்லி தலைமையை வலியுறுத்தினார். விரைவில் மாநில பா.ஜ.க அலகு முழுவதுமாக மறுசீரமைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்,” என்று பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு கட்சியின் மூத்த தலைவர் கூறினார்.
இதற்கிடையில், டெல்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை மதியம் திரும்பிய அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டார். இனி விமான நிலையங்களில் நிருபர்களிடம் பேச மாட்டேன் என அண்ணாமலை கூறினார்.இந்த செய்தியில் குறிப்பிட்ட விவரங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.