இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் 2-18 வயதில் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்த நடைபெற்று வரும், இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனையை நடத்துவதற்கு பாரத் பயோடெக்கிற்கு வழங்கப்பட்ட அனுமதியை ஒதுக்கி வைக்கக் கொரப்பட்ட மனுக்கு பதில் அளின்னுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு பக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், தொற்று பாதிப்புக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் இந்தியாவில் தயாரித்த கோவாக்சின், தடுப்பு மருந்து கொரொனா தடுப்பூசியாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வழக்கறிஞர் சஞ்சீவ் குமார் என்பவர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த இந்த சோதனையில் வயது குறைந்த சிறார்கள் ஈடுபடுத்தப்படுவதால், அவர்களை தன்னார்வலர்களாக கருத முடியாது என்று வாதிடப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மருத்துவ பரிசோதனையின் போது ஈடுபடுத்தப்படும் தன்னார்வலரின் ஒப்புதல் அவசியம் தேவை. பல்வேறு விஷயங்களில் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால் இந்த பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுபவர்கள் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால், அவர்களை தன்னார்வலர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் அவர்களிடம் அத்தகைய ஒப்பந்தம் எதுவும் இருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.
குழந்தைகளின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் ஒரு மருந்தின் நிர்வாகத்திற்காக அல்லது அவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்திற்காக குழந்தையின் உடலில் எந்தவொரு நடவடிக்கையையும் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்க அதிகாரம் உள்ளது. ஆனால் மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதில் வேறுபாடு உள்ளது. இந்த பரிசோதனை, ஆரோக்கியமான மற்றும் உயிருக்கு எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளாத குழந்தைகள் மீது நடத்தப்படுவதால், இந்த செயல் கொலை குற்றத்திற்கு கீழ் வரும் என்பதை தெளிவாகக் குறிக்கும்.
பெற்றோர்களோ அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களோ கேள்விக்குரிய தூண்டுதல்கள் மற்றும் பணத்தை கருத்தில் கொண்டு தங்கள் சம்மதத்தை அளித்திருக்க முடியும் என்பதை மறுக்க முடியாது என்றும் சஞ்சீவ் குமார் வாதிட்டார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.என். படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் அளிக்க முடியாது என்றும், மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படும் 525 குழந்தைகளின் விவரங்கள் மற்றும் அவர்களின் ஒப்பந்தத்தை சமர்பிக்க வேண்டும் என்றும், இந்த சோதனையின் போது எந்தவொரு குழந்தையும் இறந்தால் இதுபோன்ற சோதனைகளில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குத் தொடரவும் இடம் உள்ளது. தற்போது இந்த வழக்கு ஜூலை 15 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil