ரவிக் பட்டாச்சார்யா, அத்ரி மித்ரா, ஜாய்பிரகாஷ் தாஸ்
*முன்பக்கம் முற்றம் மற்றும் தரை தளத்தில் கேரேஜ் உடன் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட மூன்று மாடி வீடு.
*பக்கத்து வீட்டில், கட்டுமானத்தில் இருக்கும் நான்கு மாடி வீடு. கடந்த வாரம் நிலவரப்படி, அனைத்து தளங்களும் தயாராக இருந்தன, பெயிண்ட் மற்றும் சிறிது சிமெண்ட் பூச்சு வேலைகள் மட்டும் இருந்தது.
*ஏர் கண்டிஷனருடன் கூடிய இரண்டு மாடி வீடு.
*முன் முற்றத்தில் மாட்டுத் தொழுவத்துடன் கூடிய நான்கு அறைகள் கொண்ட வீடு.
*ஒரு கார்மென்ட் பட்டறை இணைக்கப்பட்ட மற்றொரு வீடு.
இது போன்ற வீடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது, ஒவ்வொன்றும் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் (PMAY-G) தகுதி அளவுகோலில் இருந்து வெகு தொலைவில் உள்ளது, இதன் கீழ் கான்கிரீட் வீடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அந்தவகையில் இந்த பயனாளிகள் யாரும் வறுமை, ஏழ்மை மற்றும் குடிசை அல்லது பாழடைந்த வீடுகள் ஆகிய நிபந்தனைகளின் கீழ் இந்த திட்டத்திற்கு தகுதி பெறவில்லை என்பது தெளிவாகிறது.
இருப்பினும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணையில், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்புடைய இந்த வீட்டு உரிமையாளர்கள், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் (PMAY-G) சாத்தியமான பயனாளிகள் என உள்ளூர் நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பட்டியல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த நிதியும் வழங்கப்படவில்லை, ஆனால் உள்ளூர் மட்டத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் இல்லாதிருந்தால், இந்த பட்டியல்கள், அவர்கள் உண்மையான பயனாளிகளாக மாறுவதற்கான களத்தை அமைத்திருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய ஒப்புதல்கள் மாவட்ட அளவில் செய்யப்படுகின்றன, எனவே உள்ளூர் ஊழியர்கள் வீட்டு உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து PMAY-G இன் கீழ் நிதியைப் பயன்படுத்துவது எளிது, என்று பர்பா பர்தமானின் CPI(M) மாவட்டச் செயலக உறுப்பினர் அபுர்பா சட்டர்ஜி கூறினார்.
உண்மையில், சாத்தியமான பயனாளிகளை அடையாளம் காணும் செயல்முறை, இப்போது TMC அரசாங்கத்திற்கும் BJP-ஆளும் மத்திய அரசுக்கும் இடையிலான சமீபத்திய மோதலின் மையமாக உள்ளது.
இத்தனைக்கும், கடந்த ஆண்டு எட்டு மாதங்களுக்கும் மேலாக மாநிலத்தில் இத்திட்டத்தை இடைநிறுத்திய பிறகு, இறுதியாக நவம்பர் மாதம் 11,36,488 PMAY-G வீடுகளுக்கு ரூ.8,200 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது.
இத்திட்டம் TMC யின் அரசியல் புயலுக்கு வழிவகுத்தது, இது மத்திய அரசால் அநியாயமாக குறிவைக்கப்படுகிறது என்றும், பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான நிஷித் பிரமானிக்கின் தந்தையும் கூச் பெஹார் மாவட்டத்தில் இத்திட்டத்தின் சாத்தியமான பயனாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அரசியல் சதியின் ஒரு பகுதியாக இந்த பெயர் சேர்க்கப்பட்டதாக பிரமாணிக் கூறியுள்ளார்.
வங்கிக் கணக்குகளுக்குப் பணம் மாற்றப்படுவதற்கு முன், மாநில மற்றும் மத்திய அளவில் பல சோதனைகளை உள்ளடக்கிய நீண்ட செயல்பாட்டின் முதல் படி மட்டுமே இந்தத் திட்டத்திற்குத் தகுதியானதாகக் கண்டறியப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பயனாளிகளின் பட்டியலை ஆராய்ந்து, தளத்திற்குச் சென்று, விண்ணப்பதாரர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளை நேர்காணல் செய்த பிறகு, செயல்பாட்டின் முதல் நிலையிலேயே குறைபாடுகள் இருந்ததை கண்டறிந்தது.
இந்தியன் எக்ஸ்பிரஸ், பூர்பா பர்தாமான், வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய மூன்று மாவட்டங்களுக்குச் சென்றது, அப்போது இந்தத் திட்டத்திற்கு எதிராக உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பைக் கண்டது. டிஎம்சி ஆளும் பஞ்சாயத்தின் தலைவர் முதல் கட்சியின் மையக் குழு உறுப்பினர் மற்றும் பஞ்சாயத்து ஊழியரான உள்ளூர் திரிணாமுல் தொழிலாளி வரை அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் வீடுகள் இருந்தாலும், PMAY-G க்கு தகுதி பெறுவதற்கு உள்ளூர் அளவில் அடையாளம் காணப்பட்டனர்.
இதுகுறித்து அவர்களிடம் தொடர்பு கொண்டபோது, ஒருவர் இது தவறுதலாக நடந்ததாக கூறினார், மற்றொருவர், அவரைச் சேர்த்தது குறித்து தனக்குத் தெரியாது என்றும், மூன்றாவது நபர், தனது பெயரை அகற்றுவதற்காக, தொகுதி மேம்பாட்டு அதிகாரியிடம் (BDO) பேசியதாகக் கூறினார்.
பிடிஓக்கள், பலரின் பெயர்களை நீக்கி, பட்டியலை சுத்தம் செய்வதாகக் கூறினர்.
புர்பா பர்தமான்
டிஎம்சி ஆளும் கிராம பஞ்சாயத்து தலைவர் ஜஹாங்கீர் சேக், கந்தோகோஷ் தொகுதியில் உள்ள ஷகாரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கேஷாப்பூர் கிராமத்தில், சிசிடிவி கேமராவுடன் கூடிய மூன்று மாடி வீடு மற்றும் அதன் பக்கத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டின் உரிமையாளர் ஆவார்.
அவரது மனைவி சிமா மற்றும் அவரது சகோதரர்கள் ஆலம்கிர் மற்றும் அஜாம்கிர் மற்றும் கடந்த ஆண்டு இறந்த அவரது தந்தை சேக் மகாசென் ஆகியோர் தொகுதி அளவில் தயாரிக்கப்பட்ட பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில் உள்ளனர்.
அங்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்றபோது ஜஹாங்கீர் அவரது வீட்டில் இல்லை. அழைப்புகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை. டிஎம்சி தொகுதித் தலைவர் அபார்திப் இஸ்லாத்தை தொடர்பு கொண்டபோது, ’ இரண்டு பெரிய வீடுகளைக் கொண்டிருக்கும்போது, ஜஹாங்கீர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் இங்குள்ள மக்கள் கோபத்தில் உள்ளனர்’ என்றார்.
ஆனால் சாத்தியமான பயனாளிகளை அடையாளம் காண கணக்கெடுப்பு நடந்தபோது, ஜஹாங்கீருக்கு ஒரு மண் வீடு இருந்தது. 2018 பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அரிசி வியாபாரம் செய்து நன்றாக சம்பாதித்தார்.
இதுகுறித்து கண்டோகோஷ் தொகுதி மேம்பாட்டு அதிகாரி சத்யஜித் குமார் கூறுகையில், 2018 இல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது பஞ்சாயத்தைச் சேர்ந்த கிராம உறுப்பினர்களால் மொபைல் செயலி மூலம் நடத்தப்பட்டது என்றார். மேலும் ஜஹாங்கீர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து கேட்டதற்கு, ’எந்தவொரு எதிர்ப்புக்கும் முன் அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன, என்று BDO கூறினார்.
சுமார் 40 கி.மீ தொலைவில், ஜமால்பூர் தொகுதியில் உள்ள சுரேகல்னா என்ற இடத்தில், ஜமால்பூர் 2 அஞ்சலின் டிஎம்சி தலைவராக இருக்கும் நித்தாய் குண்டு என்பவருக்கு சொந்தமான ஏசியுடன் கூடிய இரண்டு மாடி கான்கிரீட் வீடு உள்ளது.ஆனால் பட்டியலில் அவரது பெயர் உள்ளது. ’என் கட்சியில் உள்ள ஒரு பகுதி தலைவர்கள், என்னைக் கேவலப்படுத்த முயற்சிக்கிறார்கள், என் பெயரை பட்டியலில் சேர்த்துள்ளனர். எனக்கு பிரதம மந்திரி வீடு வேண்டாம் என்று BDOவிடம் சொல்லிவிட்டேன்,’ என்றார் நித்தாய்.
ஜமால்பூர் BDO, சுபாங்கர் மஜூம்தர் கூறுகையில், இது 2018 இல் கணக்கெடுக்கப்பட்டது. அப்போது நான் இந்த தொகுதியில் இல்லை. ஆப் மூலம் வீட்டின் படத்தை எடுத்து பட்டியல் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியிலிருந்து பட்டியலில் உள்ள 21,000 பெயர்களில், நாங்கள் ஏற்கனவே 6,500 பேரைத் நீக்கிவிட்டோம் என்றார்.
சுமார் 27 கி.மீ., தொலைவில் உள்ள ஹரிபூர் கிராமத்தில், டிஎம்சி நடத்தும் ரெய்னா 1 பஞ்சாயத்து சமிதியின் தலைவர் ரத்னா மஹந்தாவின் பெயர் பட்டியலில் உள்ளது. அவரது கான்கிரீட் வீட்டில், ரத்னாவின் மாமியார் மாலதி மஹந்தாவை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சந்தித்தது. “சில வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு ஒரு மண் வீடு இருந்தது. இப்போது எங்களுக்கு கான்கிரீட் வீடு உள்ளது. ஆனால் எப்படியோ தவறுதலாக என் மருமகளின் பெயர் லிஸ்டில் வந்து விட்டது” என்றார் மாலதி.
ரத்னாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, ’என்னிடம் இன்னும் மண் வீடு உள்ளது. நீங்கள் பார்த்த கான்கிரீட் வீடு சமீபத்தில் எனது கட்சி சகாக்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்து உதவியது. பட்டியலிலிருந்து எனது பெயரை நீக்குமாறு அதிகாரிகளிடம் ஏற்கனவே கூறியுள்ளேன்’ என்றார்.
வடக்கு 24 பர்கானாஸ்
ஹப்ராவில் உள்ள புர்பா ருத்ராபூர் கிராமத்தில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் பட்டியலில் அப்பகுதியில் உள்ள TMC மையக்குழு உறுப்பினர் கபிருல் ஹக் பெயர் உள்ளது. ஆனால் ஹக்கிற்கு சொந்தமாக கான்கிரீட், டைல்ஸ் வீடு உள்ளது, இது சுமார் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் ரெடிமேட் கார்மென்ட்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த அவரது மனைவி பர்வின் கூறுகையில், ''சில ஆண்டுகளுக்கு முன், மண் வீடு இருந்ததால், என் கணவர் பெயர் பட்டியலில் உள்ளது. இந்த வீட்டையும் பட்டறையையும் மூன்று வருடங்களுக்கு முன்பு கட்டினோம்” என்றார்.
அருகிலுள்ள காஷிபூர் கிராமத்தில், பபித்ரா பிஸ்வாஸ் தனது உறவினரும், உள்ளூர் TMC தலைவரும் ஆசிரியருமான சபிதா பிஸ்வாஸுடன் ஒரு கான்கிரீட் "குடும்ப வீட்டில்" தங்கியிருந்தாலும் பட்டியலில் உள்ளார். “இது என் உறவினர் வீடு. நாங்கள் மாட்டு கொட்டகையில் தான் வசிக்கிறோம். PMAY இன் கீழ் நாங்கள் ஒரு வீட்டிற்கு தகுதியானவர்கள் தான், என்று பபித்ரா பிஸ்வாஸின் மனைவி மாதுரி கூறினார், மேலும் போனில் பேசிய சபீதா, எனது மாமா மகன் பட்டியலில் இருக்கிறார். அவர் ஏழைதான் என்றார்.
ஹப்ரா-1 தொகுதி BDO ஜெயந்தா டே, பிஸ்வாஸின் வழக்கின் விவரங்களை வழங்கவில்லை, ஆனால் கபிருல் ஹக் கடந்த மாதம் பட்டியலிலிருந்து தனது பெயரை நீக்க விண்ணப்பித்ததாகக் கூறினார். முக்கிய விஷயம் என்னவென்றால், கான்கிரீட் வீடு வைத்திருக்கும் எவரும் இந்தத் திட்டத்தின் (PMAY) கீழ் வீடு பெறக்கூடாது. நாங்கள் அதை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம், என்று கூறினார்.
‘முடிவு என்ன?’
பூர்பா பர்தாமானின் ஜமால்பூரில் ஒரு சாத்தியமான பயனாளியாக அடையாளம் காணப்பட்ட TMC அஞ்சல் தலைவர் நிதாய் குண்டுவின் கான்கிரீட் இரண்டு மாடி வீட்டின் குறுக்கே தகர சீட்டுகளால் ஆன வீடு இருக்கும் சபீனா பீபி போன்றவர்களுக்கு BDO இன் உத்தரவாதம் சிறிய நம்பிக்கையை அளிக்கிறது.
’நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திட்டத்திற்கு முதலில் விண்ணப்பித்தேன், எதுவும் நடக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் விண்ணப்பித்தேன். இன்னும் பட்டியலில் என் பெயர் இல்லை. மழைக்காலத்தில் என் நான்கு குழந்தைகள் உட்பட எங்களுக்கு இந்த வீடு நரகம் தான். ஆனால் இப்போ பாரு நம்ம நேத்தா கான்க்ரீட் வீட்டை” என்று குந்துவின் வீட்டைக் காட்டினார். "இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டைப் பெறுவதற்கு நாங்கள் தகுதியற்றவர்கள் இல்லையா?" என்று கேள்வியுடன் முடித்தார் சபீனா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.