பிரதமர் கேர்ஸ் நிதியை, தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கு மாற்றத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இன்றுவரை பிரதமர் கேர்ஸ் நிதிக்கு வரப்பெற்றுள்ள நிதி விவரங்கள் குறித்த வெளிப்படையான விவரங்களை மத்திய அரசு தவிர்த்து வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
Pm cares Supreme court Judgement: `அவசர சூழ்நிலைக்கான பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி’யில் (PM CARES நிதி) டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கு (NDRF) மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது. தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொது நல வழக்கு மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், பிரதமர் கேர்ஸ் நிதியிலிருந்து பணத்தை மாற்றுவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தது.
முன்னதாக, கொரோனா பெருந்தொற்று ஒரு தேசிய பேரிடர் என்பதால் பிரதமர் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கு மாற்ற உத்தரவிடுமாறு தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. மேலும், மனுவில், இன்றுவரை பிரதமர் கேர்ஸ் நிதிக்கு வரப்பெற்றுள்ள நிதி விவரங்கள் குறித்த வெளிப்படையான விவரங்களை மத்திய அரசு தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், கோவிட் -19 நெருக்கடியை நிர்வகிக்க, 2019 வருட பேரிடர் மேலாண்மை திட்டங்கள் போதுமானது என்றும், புதிய திட்டம் எதுவும் தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கு தன்னார்வ அடிப்படையிலான பங்களிப்புகள் தொடரும் என்றும் தெரிவித்தது.
முன்னதாக, 2016, ஜூனில், நாட்டின் முதல் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கினார். இத்திட்டம் 2019ல் புதுப்பிக்கப்பட்டது. SendaiFramework அடிப்படையில், தேசிய திட்டத்தை வைத்திருக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா மாறியது.
கோவிட் 19 நோய்த் தொற்று போன்ற, எந்த வகையான அவசர சூழ்நிலை அல்லது துன்பகரமான சூழ்நிலையையும் கையாள்வதற்குப் பயன்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, `அவசர சூழ்நிலைகளுக்கான பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி (PM CARES நிதி)’ என்ற பெயரில் பப்ளிக் சாரிட்டபிள் ட்ரஸ்ட் ஒன்றை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் உருவாக்கியது. ட்ரஸ்ட்டின் தலைவராக பிரதமர் இருப்பார் என்றும், பாதுகாப்புத் துறை, உள்துறை மற்றும் நிதித் துறை அமைச்சர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Funds collected by #PMCARES fund are entirely different and these funds are funds of charitable trusts. This fund need not be transferred- Supreme Court on PM CARES pic.twitter.com/jPwW91TAJ0
விசாரணையின் போது, அரசியலமைப்பு பிரிவு 32-ன் கீழ் ஏற்றுக் கொள்ள இந்த வழக்கு தகுதியற்றது என்று கூறிய அரசு தரப்பு வழக்கறிஞர், 2005 வருட தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், பிரிவு 46 ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிதியைத் தவிர, மற்ற அனைத்து நிதிகளும் வேறுபட்டவை என்று வாதிட்டார். தனித்துவமான ஒவ்வொரு நிதிகளும், அந்தந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது” என்றும் வாதிட்டார.
மேலும், “பேரிடர் மேலாண்மை (டி.எம்) சட்டம், பிரிவு 46 ன் கீழ் தேசிய பேரிடர் மீட்பு நிதி (National Disaster Response Fund) அமைக்கப்பட்டது. இதுநாள் வரையில், மத்திய அரசின் தனது பட்ஜெட் மூலம், இதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது. தனிநபர் அல்லது நிறுவனத்திடமிருந்து, பேரிடர் மேலாண்மைக்காக, தேசியப் பேரிடர் மீட்பு நிதிக்கு தொகை / மானியங்களை பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-இன் பிரிவு 46(1) (b)_இன் படி, பெறுவதற்கான விதிமுறைகளை, மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
“பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியாவில் பல்வேறு நிதிகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த வகையில், தன்னார்வ அடிப்படையிலான பங்களிப்புக்காக பிரதமர் கேர்ஸ் உருவாக்கப்பட்டது” என்றும் தெரிவித்தார்.