நாட்டில் நடைபெறும் சிலை உடைப்பு சம்பவங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் நடந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை தோற்கடித்து பிஜேபி ஆட்சியைப் பிடித்தது. புதிய அரசு பதவி எற்பதற்கு முன்பாக, அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா, ‘லெனின் சிலை அகற்றப்பட்டது போல், தமிழகத்தில் பெரியாரின் சிலைகள் அகற்றப்படும்’ என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. சென்னையில் பூணுல் அறுக்கப்பட்டது. கோவையில் பிஜேபி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்த சிலை பிரச்னை, நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி பிரபல தலைவர்களின் சிலை உடைப்புக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்தார். ‘நாட்டின் சில பகுதிகளில் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் தம்மால் ஏற்க முடியாது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மோடி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு பேசினார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று எச்சரிக்கை அறிவுறுத்தல் அவசர கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது.
அதில், “சிலைகளை சேதப்படுத்தும் செயல்கள் நாட்டின் சில பகுதிகளில் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதுபோல் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இனியும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து மேற்கொள்வதுடன் சிலைகளை உடைக்கும்படி தூண்டிவிடுவோர் மீது சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி தக்க நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். சமூக விரோத சக்திகளை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.