காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸார் இன்று சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.
டெல்லி ராஜ்காட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர், “தேசிய ஒற்றுமைக்காக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றவர் ராகுல் காந்தி.
வீரமரணம் அடைந்த பிரதமரின் மகன். அவரால் நாட்டை அவமதிக்க முடியாது” என்றார். தொடர்ந்து பிரியங்கா காந்தி கூறுகையில், “எனது தந்தை படுகொலை செய்யப்பட்டார்.
அவரது இறுதி ஊர்வல பேரணிக்கு ராணுவ டிரக் கொண்டுவரப்பட்டது.
அது எனது நினைவலையில் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. நானும் எனது சகோதரனும் (ராகுல் காந்தி) வாகனத்தில் இருந்தோம். அப்போது எங்களது தந்தையின் உடலை வாகனத்தில் இருந்து இறங்கி ராகுல் காண விரும்பினார்.
அப்போது பாதுகாப்பு காரணங்களுக்கு எங்களை இறங்க விடவில்லை. எனது அம்மாவும் தடுத்தார். நானும் எனது அம்மாவிடம் கூறினேன்.
தொடர்ந்து, எங்களது தந்தை இறுதி பேரணியின்போது ராகுல் நடந்து சென்றார். சுமார் 400 மீட்டர் வரை சென்றிருப்போம். இன்று ராஜ்காட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் நிற்கிறோம்.
பிரதமர் மோடி ஓர் கோழை. அவர் பாராளுமன்றத்தில் நேரு குடும்பம் நேரு என்ற குடும்ப பெயரை ஏன் சேர்ப்பதில்லை என்பதன் மூலம் காஷ்மீர் பண்டிட்களை அவமதித்தார்.
ஆனால் யாரும் அவரிடம் இதுதொடர்பாக கேட்கவில்லை. அவருக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை. எம்.பி. பதவி பறிக்கப்படவில்லை” என்றார்.
தொடர்ந்து, “என் மீதும் வழக்குப் போடுங்கள், என்னையும் கைது செய்யுங்கள்” என்று ஆவேசமாக பேசினார்.
2019ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியை இழந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/