இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் பலன் அளித்துள்ளது. இதனால், நாம் பெருமளவில் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தியுள்ளதாக மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Advertisment
நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து, இன்று(ஜூன் 16) 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப், கேரளா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த இரண்டு வாரங்களில் நமக்கு கிடைத்த அனுபவம், எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். கள நிலவரத்தை இன்று உங்களிடம் இருந்து தெரிந்து கொள்வேன். உங்களின் ஆலோசனை, எதிர்காலத்தில் திட்டங்களை வகுப்பதற்கு பயனளிக்கும்.
கடந்த சில வாரங்களில் ஆயிரகணக்கான இந்தியர்கள், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனர். அனைத்து வகையான போக்குவரத்தும் துவங்கிய நிலையில், உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை. குணமடைவோர் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கு மேல் உள்ளது. கொரோனாவால், இந்தியாவில் உயிரிழப்பு விகிதமும் குறைவாக உள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், கொரோனாவை கட்டுப்படுத்த உதவியது.
டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, குஜராத், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய அதிக பாதிப்புள்ள மாநில முதல்வர்களுடன் புதன்கிழமை தனித்தனியாக விவாதிக்கப்பட உள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”