கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டுக்கு 38 மில்லியன் டன் கார்பன் வெளியேற்றத்தை நாங்கள் குறைத்துள்ளோம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உயர் மட்ட கூட்டத்தில் (ECOSOC) பிரதமர் மோடி காணொலி வழியே இன்று உரையாற்றினார்.
Advertisment
அதில், "இந்தாண்டு, நாம் ஐ.நா அமைக்கப்பட்டதன், 75வது ஆண்டுவிழாவை கொண்டாடுகிறோம். மனித முன்னேற்றத்துக்கு ஐ.நா.வின் பல பங்களிப்புகளை அங்கீகரிக்கும் தருணம் இது. இன்றைய உலகில் ஐ.நாவின் பங்கு மற்றும் தேவையை மதிப்பிடும் வாய்ப்பும் இதுதான்.
2ம் உலகப்போருக்குப்பின், ஐ.நா.வின் 50 உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. அதன்பின் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இன்று 193 உறுப்பு நாடுகளை ஐ.நா ஒன்றிணைத்துள்ளது.
ஐ.நா.வின் வளர்ச்சி பணிக்கும் மற்றும் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலுக்கும் (ECOSOC) இந்தியா ஆரம்பம் முதலே தீவிரமாக ஆதரவு அளித்துள்ளது. ECOSOC முதல் தலைவர் இந்தியர். ECOSOC கொள்கையை உருவாக்கவும், இந்தியா தனது பங்களிப்பை அளித்துள்ளது.
இன்று, எங்களின் உள்நாட்டு முயற்சிகள் மூலம், 2030ம் ஆண்டுக்கான கொள்கை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய, நாங்கள் மீண்டும் முக்கிய பங்காற்றுகிறோம். இதர வளரும் நாடுகள், தங்களின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையவும், நாங்கள் உதவுகிறோம்.
மனித இனத்தில் 6-ல் ஒரு பங்கினர் இந்தியாவில் உள்ளனர். எங்களின் பலம் மற்றும் பொறுப்பை நாங்கள் மனதில் கொள்கிறோம். இந்தியா தனது வளர்ச்சி நோக்கங்களை அடைவதில் வெற்றி பெற்றால், அது உலகளவிலான இலக்குகளை அடைய நீண்ட காலம் உதவிகரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.
எங்களின் குறிக்கோள் ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஷ்வாஸ்’ அதாவது, ‘எல்லோரும் ஒன்றிணைந்து அனைவரது நம்பிக்கையுடன் கூடிய, அனைவருக்குமான வளர்ச்சி’. இது யாரையும் பின்னால் விட்டுவிடாத, நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) கொள்கையுடன் ஒத்திருக்கிறது.
6 லட்சம் கிராமங்களில் முழு சுகாதார வசதியை நிறைவேற்றி, கடந்தாண்டு, எங்கள் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டை நாங்கள் கொண்டாடினோம்.
நிதி உள்ளடக்கத்துக்கு நாங்கள் தொழில்நுட்பத்தின் சக்தியை பயன்படுத்தியுள்ளோம். ஒருவரின் ஆதார் அடையாள எண், வங்கி கணக்கு, கைபேசி எண் ஆகிய மூன்றையும் இணைக்கும் அடிப்படையில் இது உள்ளது.
எங்களின் ‘அனைவருக்கும் வீடு’ திட்டம், 2022ம் ஆண்டில், இந்தியா சுதந்திர நாடாக 75வது ஆண்டை நிறைவு செய்யும்போது, ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வீட்டை பெற உறுதி செய்யும்.
2025ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கவும் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களின் அளவு மற்றும் வெற்றி, நாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் இருந்து இதர வளரும் நாடுகளும் கற்றுக் கொள்ள முடியும். இந்தியாவின் சுகாதார முறைகள், பிற நாடுகளில் இருப்பதை விட சிறப்பாக உள்ளது.
வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும்போது, நமது பூமிக்கான எங்கள் பொறுப்பையும் நாங்கள் மறக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டுக்கு 38 மில்லியன் டன் கார்பன் வெளியேற்றத்தை நாங்கள் குறைத்துள்ளோம்.
இயற்கையுடன் இணக்கமாக வாழும் பழங்கால பாரம்பரியத்தை நாங்கள் கொண்டுள்ளோம். சுத்தத்திற்கான மிகப் பெரிய பிரசாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகத்தை நாங்கள் ஊக்குவிக்கவில்லை.
பூகம்பங்கள், புயல்கள், எபோலா நெருக்கடி அல்லது எந்தவித இயற்கை மற்றும் செயற்கை நெருக்கடி ஏற்பட்டாலும், இந்தியா விரைவாகவும், ஒற்றுமையுடனும் செயல்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்திலும், நாங்கள் 150 நாடுகளுக்கு மருத்து மற்றும் இதர உதவி அளித்துள்ளோம். உலகிலேயே கொரோனாவிலிருந்து விரைவாக மீளும் நாடாக இந்தியா உள்ளது.
சர்வதேச சூரிய சக்தி கூட்டணியை உருவாக்கும் எங்கள் முயற்சி, பருவநிலை நடவடிக்கையின் வெளிப்பாடாக இருந்தது. அதேபோல், பேரிடர் மீட்பு நடவடிக்கைக்கான கூட்டணியும், தொடர்புடைய அனைவரையும் ஒன்றிணைக்கிறது"
என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil