கர்நாடகா மாநிலம் மங்களூருவில் செயின்ட் ஜெரோசா ஆங்கில மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சிஸ்டர் பிரபா என்பவர் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி 8-ம் தேதி 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு "செய்யும் தொழிலே தெய்வம்" என்ற தலைப்பில் பாடம் நடத்தினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராமரைப் பற்றி ஆசிரியை பிரபா அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது.
சில மாணவர்கள் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளியின் முன் திரண்ட சில பெற்றோர் மற்றும் வலதுசாரி செயற்பாட்டாளர்கள் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பள்ளி அளவில் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து சரத்குமார் என்ற பெற்றோர் பள்ளி ஆசிரியை மீது மங்களூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார்.
திங்களன்று இதுகுறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியை பிரபா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது இடத்திற்கு வேறொரு ஆசிரியர் விரைவில் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "செயின்ட் ஜெரோசா பள்ளிக்கு 60 ஆண்டுகால வரலாறு உள்ளது, அதன் வரலாற்றில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லை. நாங்கள் அரசியலமைப்பைப் பின்பற்றுபவர்கள் மற்றும் அனைத்து மதங்களின் நம்பிக்கை மற்றும் நடைமுறைகளையும் ஏற்றுக் கொள்பவர்கள். எனவே, பெற்றோர்கள் இந்த சம்பவத்தை கைவிட்டு பள்ளியின் எதிர்கால நலனில் எங்களுடன் கைகோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று பள்ளித் தலைமையாசிரியை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:https://indianexpress.com/article/cities/bangalore/karnataka-pm-modi-ram-school-teacher-9157981/?tbref=hp
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“